(இராஜதுரை ஹஷான்)

நீதித்துறையின் சுயாதீனத்தினை பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றமானது எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திலிருந்து தனது கடமைகளை ஆரம்பிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கிணங்க நீதித்துறையின் சுயாதீனத் தன்மையினை மேலும் வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட விசேட நீதிமன்றமானது எவ்வித அரசியல் நோக்கங்களையும் மையப்படுத்தி உருவாக்கப்படவில்லை. 

வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு நிலுவையிலிருக்கும்போது மக்களுக்கு சட்டத்தின் மீதும் நீதித்துறை மீதும் நம்பிக்கை அற்றும் போகும். முத்துறைகளின் முக்கியத்துறையாகவே நீதித்துறை காணப்படுகின்றது. மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையினை இழந்தாலும் நீதித்துறையின் மீதான நம்பிக்கையினை  இழக்க மாட்டார்கள் ஆனால் கால சூழ்நிலை மக்களின் எண்ணங்களை திசைதிருப்பி விடுகின்றது.

ஆகவே நாட்டின் நீதித்துறையினை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித அரசியல் நோக்கங்களும், பழிவாங்கல்களும் கிடையாது என்ற விடயத்தினை பொதுமக்கள் உட்பட அரசியலவாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.