(இராஜதுரை ஹஷான்)

பணி புறக்கணிப்பினை மேற்கொண்டுவரும் தபால் ஊழியர்கள் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், இன்று முதல் சேவைக்கு மீள் திரும்பாதவர்கள் தமது பதவியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என  தபால் மா அதிபர் ரோஹண அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில், 

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பது நாட்களாக தபால் ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்க தரப்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அறிவுறுத்தியும் இவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

இந் நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நியாயமானதா என்பவை தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் முன்னரே தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டமை முரணானதாகவே காணப்படுகின்றது.

நேற்று  தபால் தொழிற்சங்க ஊழியர்கள் கொழும்பில் போராட்ட பேரணியினை மேற்கொண்டு தமது எதிர்ப்பினை  தெரிவித்தனர். இவர்களின் செயற்பாட்டிற்கு எதிராக தற்போது அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

அதாவது போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும்  இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் இன்று சேவைக்கு  சமூகமளிக்காத ஊழியர்கள் பதவி விலகியவர்களாக கருதப்பட்டு பணி நீக்கப்படுவார்கள்.

அனைத்து தபால் நிலையங்களிலும் சேவைகளை முன்னெடுப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தபால் நிலைய அதிகாரிகள், பிரிவு பொறுப்பதிகாரிகள் மற்றும் அரச, உப தபால் நிலைய ஊழியர்களும்  தபால் திணைக்கள நிபந்தனை மற்றும் கொள்கைகளுக்குட்பட்டு செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.