உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் கன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை, சொச்சி பிஷ்ட் விளையாட்டரங்கில் இன்று திங்கள் இரவு ஜீ குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் சந்தித்த பெல்ஜியம் 3 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றிபெற்றது.

உலக கால்பந்தாட்டத் தரப்படுத்தலில் 3ஆம் நிலையிலுள்ள பெல்ஜியத்துக்கு முதல் 45 நிமிடங்களில் கோல் போடவிடாமல் தடுத்த 55ஆம் நிலையிலுள்ள பனாமா இடைவேளையின் பின்னர் சோடை போனது.

போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணியினருக்கும் கோல் போடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் பின்கள வீரர்கள் நிலைமைகளைக் கட்டுப்பாட்டில் வைத்து கோல் போடப்படுவதைத் தடுத்த வண்ணம் இருந்தனர். கோல் போடுவதில் வல்லவரான பெல்ஜியத்தின் அதி சிறந்த வீரரான ரொமேலு லூக்காக்கு பல தடவைகள் கோல் போட முயற்சித்தபோதிலும் அவை எதுவும் கைகூடாததால் குழம்பியவராக காணப்பட்டார்.

இடைவெளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது 47ஆவது நிமிடத்தில் 2 அடி உயரத்தில் மிதந்த பந்து தரையைத் தொடுவதற்கு முன்னர் ட்ரைஸ் மேர்ட்டென்ஸ் தனது வலது காலால் ‘வொலி’ முறையில் உதைத்து அபார கோல் ஒன்றைப் போட்ட பெல்ஜியத்தை முன்னிலையில் இட்டார்.

அதன் பின்னர் இரண்டு அணியினரும் முரட்டுத்தனமாக விளையாட முற்பட்டதால் ஸம்பியா நாட்டு மத்தியஸ்தர் சிக்காவே ஜானியின் மஞ்சள் அட்டை எச்சரிக்கைகளுக்கு அடுத்தடுத்து இலக்காகினர்.

இப் போட்டியில் பெல்ஜியத்தின் ஐந்து வீரர்களுக்கும் பனாமாவின் மூன்று வீரர்களுக்குமாக மொத்தம் எட்டு வீரர்களுக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

போட்டியின் 69ஆவது நிமிடத்தில் ஈடன் ஹஸார்ட் பரிமாறிய பந்தை கெவின் டி ப்றயன் முன்னால் நகர்த்தியவாறு தனது முன்னங்காலால் சற்று உயர்வாக உயர்த்தி உதைக்க பந்தை நோக்கித் தாவிய லூக்காக்கு அபாரமாக தனது தலையால் முட்டி கோல் போட பெல்ஜியம் 2 க்கு 0 என முன்னிலை அடைந்தது.

ஆறு நிமிடங்கள் கழித்து லூக்காக்கு தனது இரண்டாவது கோலைப் போட்டார். 

இம்முறை டி ப்றயனும் அக்செல் விட்செலும் இணைந்து பந்தை நகர்த்தியவாறு முன்னோக்கிச் சென்றபோது விட்செல்லிடமிருந்து ஹஸார்டை பந்து சென்றடைந்தது. அந்த சந்தர்ப்பத்தில் பந்தை ஹஸார்ட் பரிமாற பனாமா கோல் எல்லையை ஆக்கிரமித்த லூக்காக்கு முன்னே வந்த கோல்காப்பாளர் ஜெய்ம் பெனிடோவுக்கு  வித்தைக் காட்டி பந்தை வேகமாக கோலினுள் புகுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஆறுதல் கோல் ஒன்றையாவது போடுவதற்கு பனாமா முன்வரிசை வீரர்கள் முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சிகள் பலனளி்க்காமல் போக பெல்ஜியம் 3 க்கு 0 என இலகுவாக வெற்றிபெற்றது.