(நெவில் அன்தனி)

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையைத் தடுக்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் பொருட்டு அவுஸ்திரேலிய ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான அமைப்புக்கும் இலங்கை ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான அமைப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு கிங்ஸ்பறி ஹோட்டலில்  இன்று நடைபெற்ற விசேட வைபவத்தின்போது இந்த உடன்படிக்கையில் அவுஸ்திரேலிய ஊக்கமருந்து பாவனை தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டேவிட் ஷார்ப், இலங்கை ஊக்கமருந்து தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சீவலி ஜயவிக்ரம ஆகிய இருவரும் கைச்சித்திட்டனர்.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையினால் விளைாயட்டு வீர, வீராங்கனைகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் எதிர்கொள்ளும் விளைவுகளைத் தடுப்பதற்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை ஊக்கமருந்து பாவனைத் தடுப்புப் பிரிவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டுத்துறையில் ஊக்குமருந்து பாவனையைத் தடுக்கும் ஆசிய கடல்சூழ் பிராந்தியத்திலுள்ள 29 நாடுகளின் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மாநாட்டுடன் பின்னிப் பிணையப்பட்ட நிகழ்வாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.