(நா.தினுஷா) 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் இன்று கொழும்பு துறைமுகத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.

பிரான்ஸ் கப்பற்படைக்கு சொந்தமான சூர்க்கூ மற்றும் டிக்ஷ்மூட் ஆகிய இரு கப்பல்களுமே  இலங்கையை வந்தடைந்துள்ளது. 

டிக்ஷ்மூட் கப்பலின் கட்டளை அதிகாரியான கபிதான்  ஜீன் போசர் மற்றும் சூர்க்கூ கப்பலின் கட்டளை அதிகாரியான கிறிஸ்டீன் ரிபே ஆகியோரின் தலைமையில் இவ்விரு கப்பல்களும் இலங்கையை வந்தடைந்திருந்தன. 

இதன்போது மேற்கு கடற்படை கட்டளை அதிகாரியான  ரியல் அட்மிரல் நிசாந்த உளுகெதென்ன மற்றும்  பிரான்ஸ் கப்பற்படை அதிகாரிகளுக்கிடையிலான இரு தரப்பு கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலின் போது கடற்படை வீரர்களின் பயிற்றுவிப்பு நடவடிக்கைகள், கடற்பகுதிகளில் இடம்பெறும் போதைபொருள் பாவனை மற்றும் போர் நடவடிக்கைகள் அற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. 

ஒரு நாள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த இவ்விரு கப்பல்களும் தனது நல்லெண்ண விஜயத்தை முடித்து கொண்டு இன்று மாலை இலங்கையிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.