தேசிய விருதுப் பெற்ற இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி நடித்திருக்கும் ‘கண்ணே கலைமானே ’ படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டில் உதயநிதி நடிப்பில் வெளியான சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும் ஆகிய மூன்று படங்களும் வெற்றிப் படங்களாக அமையவில்லை. அதேப் போல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான நிமிர் படமும் உதயநிதிக்கு கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில் தர்மதுரை படத்தின் வெற்றியின் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்திருக்கும் இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவான கண்ணே கலைமானே படத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறார் நடிகர் உதயநிதி.

இந்த படத்தில் இவர் விவசாயியாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ராசியான நடிகை தமன்னா நடித்திருக்கிறார்.

அண்மைக்காலமாக தமிழ் திரையுலக முன்னணி நடிகர்கள் விவசாயத்தைப் பற்றி பேசுவதும் நடிப்பதும் அதிகரித்திருக்கிறது. ‘கடைக்குட்டி  சிங்கம் ’படத்தில் கார்த்தியும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வளர்ந்து வரும் பெயரிடப்படாத படத்தில் இளைய தளபதி விஜய்யும் விவசாயத்தைப் பற்றி பேசுவதாகவும், நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

இந்நிலையில் நடிகர் உதயநிதி விவசாயியாக நடித்திருக்கும் இந்த படமும் பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். கண்ணே கலைமானே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் உதயநிதி விவசாயியாக தோன்றுவது உண்மையிலேயே நன்றாக இருப்பதாக அனைத்து தரப்பினரும் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள். அதனால் கண்ணே கலைமானே படம் உதயநிதிக்கு வெற்றிப்படமாக அமையும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.