அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தால் மகிழ்ச்சி தான் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் திருச்சியில் ஊடகவியளாலர்களிடம் தெரிவித்ததாவது.

‘டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்குபற்றினேன். தமிழகத்திற்குரிய காவிரி நீரை கிடைக்க வழிவகை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றம் நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடமும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தமிழகத்திற்குரிய காவிரி நீர் கிடைப்பது உறுதி. காவிரி மேலாண்மை ஆணையத்தை விரைவாக கூட்டி தமிழகத்திற்குரிய நீரை வழங்க பிரதமரிடம் வலியுறுத்தினேன். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரி நதிநீர் பங்கீட்டு குழுவிற்கும் தமிழக அரசு உறுப்பினர்களை அறிவித்துவிட்டது. 

கேரளம், புதுச்சேரி அரசுகளும் அறிவித்துவிட்டன. இன்னும் கர்நாடக அரசு மட்டும் அறிவிக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல்கூட்டம் குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யவேண்டும். மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் வந்தவுடன் அணையை திறப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்புவதற்கான வாய்ப்பு இறைவனிடம் தான் உள்ளது.

அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் சேர்ந்தால் மகிழ்ச்சி. பாராட்டுக்குரியது. கட்சியிலிருந்து பிரிந்து சென்று மீண்டும் வருபவர்களுக்கு சட்டப்படி அமைச்சர் பதவி கொடுக்க இயலாது. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது எப்படி இடைத்தேர்தல் வரும்? என்றார்.