மொஸ்கோ லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் ஞாயிறு மாலை நடைபெற்ற குழு எவ் உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் ஜேர்மனியை மெக்சிகோ அதிர்ச்சி தோல்வி அடையச் செய்தது.

போட்டியின் 35ஆவது நிமிடத்தில் ஹேர்விங் லோஸானோ போட்ட கொல், மெக்சிகோவின் வெற்றி கோலாக அமைந்தது.

உலகக் கிண்ண வரலாற்றில் நடப்பு சம்பியனாக மூன்று சந்தர்ப்பங்கில் தனது ஆரம்பப் போட்டியில் (3 க்கு 1 எதிர் ஆர்ஜன்டீனா 1958), போலந்து (0 க்கு 0 எதிர் போலந்து 1978), 1 க்கு 0 எதிர் பொலிவியா 1994) தோல்வி அடையாமல் இருந்த ஜேர்மனி முதல் தடவையாக நடப்பு உலக சம்பியனாக ஆரம்பப் போட்டியில் இம் முறை தோல்வி அடைந்தது.

1986 க்குப் பின்னர் தனது ஆரம்பப் போட்டியில் ஜேர்மனி வெற்றிபெறத் தவறிய முதலாவது சந்தர்ப்பமும் இதுவாகும். 1986 இல் உருகுவேயுடனான தனது ஆரம்பப் போட்டியை 1 க்கு 1 என ஜேர்மனி வேற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டிருந்தது.

மெக்சிகோ கோல் போட்ட பின்னர் கடைசி நிமிடம்வரை போட்டியை தன்வசப்படுத்த ஜேர்மனி முயற்சித்தபோதிலும் முறையான வாய்ப்புகள் வந்தபோதெல்லாம் அவற்றைப் பயன்படுத்தத் தவறியது.

போட்டியின் முதலாவது ஆட்ட நேரப் பகுதியில் ஆக்ரோஷம் கலந்த எதிர்த்தாடலை வெளிப்படுத்தி கோல் போட்ட மெக்சிகோ, அதன் பின்னர் ஒற்றைக் கோலால் அடைந்த முன்னிலையை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் தடுத்தாடும் உத்தியைக் கையாண்டதை அவதானிக்க முடிந்தது.

ஜேர்மனியின் எதிர்த்தாடும் உத்திக்கு 35ஆவது நிமிடத்தில் பதிலடி கொடுத்த மெக்சிகொ தனது பகுதியில் இருந்து மிகவேகமாக பந்தை மத்திய களத்துக்கு நகர்த்தியது. அந்த சந்தர்ப்பத்தில் இடப்புறமாக வேகமாக முன்னோக்கி ஓடிய லொஸானோவை நோக்கி ஜேவியர் ஹேர்னெண்டெஸ் பந்தை பரிமாற, லொஸானோ மிக நேர்த்தியாக அசுர வேகத்தில் பந்தை கோலினுள் புகுத்தி மெக்சிகோவை முன்னிலையில் இட்டார். இதனைத் தொடர்ந்து உடனடியாகவே ஜெர்மனிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் டோனி குறூசின் ப்றீ கிக்கை மெக்சிகோ கோல்காப்பாளர் கில்லேமோ ஒக்கோவா தனது கைகளால் தட்ட பந்து குறுக்கு கம்பத்தில் பட்டு முன்னோக்கி சென்றது.

இடைவேளையின் பின்னர் மெக்சிகோவுக்கு இரண்டு இலகுவான கோல் போடும் வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவை இரண்டும் கோட்டைவிடப்பட்டன.

மறுபுறத்தில் குறுகிய தூர பரிமாற்றங்களுடன் கோல் போடுவதற்கு ஜேர்மனி முயற்சித்த போதிலும் அதன் வீரர்களிடம் வெகமும் விவேகமும் காணப்படாததால் அந்த முயற்சிகள் வீண்போயின.