சமாரா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற குழு “ஈ” யிற்கான உலகக் கிண்ண காலபந்தாட்டப் போட்டியில் கோஸ்டாரிக்கா அணியை 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் சேர்பியா வெற்றிகொண்டது.

இரண்டு அணிகளாலும் பல கோல்போடும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் அவை கைகூடாத நிலையில் போட்டியின்  56 ஆவது நிமிடத்தில் சேர்பியா சார்பாக அதன் அணித் தலைவர் அலெக்ஸாண்டர் கோலாரொவ் அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.

கோஸ்டாரிக்கா வீரர்கள் நால்வர் வரிசையாக நிற்க சுமார்  25 யார் தூரத்திலிருந்து அவர்களுக்கு மேலாக அலெக்ஸாண்டர் கோலாரோவ் தனது இடது காலால் அசுர வேகத்தில் உதைத்த (ப்றீ கிக்) பந்து, வளைந்து சென்றவாறு கோஸ்டாரிக்கா கோல் கம்பத்தின் வலது மூலை ஊடாக உள்ளே சென்றது.

இந்த கொலை சேர்பியாவின் கோல் காப்பாளர் உட்பட அனைத்து வீரர்களும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் விளையாடிதுடன் பல கோல் போடும் வாய்ப்புகளையும் உருவாக்கி முழு அரங்கையும் பரபரப்பில் ஆழ்த்தின. 

கோல் நிலையை சமப்படுத்த கோஸ்டாரிக்கா பல முயற்சிகளை எடுத்த போதிலும் சேர்பிய பின்கள வீரர்கள் அவற்றை முறியடித்து தமது வெற்றியை தக்கவைத்துக்கொண்டனர்.

இந்த ஆட்டம் 9 நிமிட உபாதை ஈடு நேரத்தைக் கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் செர்பியாவின் நெமஞ்சா மெட்டிக்குக்கும் கொஸ்டா ரிக்கா மாற்று வீரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் உதவி மத்தியஸ்தர் தலையிட்டு நிலைமையை சுமுக நிலைக்குக்  கொண்டுவந்தனர்.

உலகக் கிண்ண வரலாற்றில் 1998 க்குப் பின்னர் சேர்பியா தனது ஆரம்பப் போட்டியில் வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன்னர் யூகோஸ்லாவியா என்ற பெயரில் 1998 இல் ஆரம்பப் போட்டி வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

கோஸ்டாரிக்காவைப் பொறுத்த மட்டில் 2006 க்குப் பின்னர் அடைந்த முதலாவது தோல்வி இதுவாகும். போலந்துக்கு எதிராக 2 க்கு 1 என தோல்வி அடைந்த கோஸ்டாரிக்கா அதன் பின்னர் ஐந்து போட்டிகளில் தோல்வி அடையாமல் இருந்தது.

சேர்பியாவின் ப்றனிஸ்லாவ் இவானோவிச், தனது 104 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் இன்று விளையாடியதுடன் தனது சொந்த நாட்டுக்காக அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார். டிஜான் ஸ்டென்கோவிச் 103 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருந்தமையே முன்னைய சாதனையாக இருந்தது. 

(என்.வீ.ஏ.)