உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் கன்னிப் பிரவேசம் செய்துள்ள சிறிய நாடான ஐஸ்லாந்து, குழு டியிற்கான ஆர்ஜன்டீனாவுடனான ஆரம்பப் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்து, முழு கால்பந்தாட்ட உலகையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. உலகக் கிண்ணப் போட்டிகளில் கலந்துகொள்ளும் நாடுகளில் மிகக் குறைந்த சனத்தொகையைக் கொண்ட நாடு ஐஸ்லாந்து ஆகும்.


போதாக்குறைக்கு உலகக் கால்பந்தாட்ட அரங்கில் அதிசிறந்த வீரர்களில் ஒருவரான லயனல் மெசி உதைத்த பெனல்டியை ஐஸ்லாந்து கோல்காப்பாளர் ஹன்ஸ் போர் ஹோல்டர்சன் சரியான திசைக்குத் தாவி தடுத்து நிறுத்தியதால் ஆர்ஜன்டீனாவின் வெற்றிக் கனவு கலைந்துபோனது.

மொஸ்கோ ஸ்பார்ட்க் விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற இப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு மிகவும் அனுகூலமான அணியாக இரண்டு தடவைகள் உலக சம்பியனான (1978, 1986) ஆர்ஜன்டினா வெகுவாகக் கருதப்பட்டது.

ஆனால் ஆர்ஜன்டீனாவை விட உலகக் கால்பந்தாட்டத் தரப்படுத்திலில் 20 இடங்கள் பின்னிலையில் இருக்கும் ஐஸ்லாந்து அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி ஆர்ஜன்டீனாவைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.

போட்டியின் 19ஆவது நிமிடத்தில் 19ஆம் இலக்க வீரர் குன் ஒகேரோ அற்புதமான கோல் ஒன்றைப் போட்டு ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார். 

ஆனால் அடுத்த நான்காவது நிமிடத்தில் அல்பியோ பினபோகாசன் கோல் நிலையை சமப்படுத்தி ஆர்ஜன்டீனாவை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த கோலைப் போட்டதன் மூலம் ஐஸ்லாந்து சார்பாக உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் கோல் போட்ட முதலாமவர் என்ற பெருமையை பினபொகாசன் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் 64ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீன வீரர் லயனல் மெசி உதைத்த பெனல்டியை ஐஸ்லாந்து கோல் காப்பாளர் தடுத்து நிறுத்திய அனைவரினதும் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து எந்த அணியும் கோல் போடாததால் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் உலகக் கிண்ண முதல் முயற்சியிலேயே ஒரு புள்ளியை ஐஸ்லாந்து பெற்றுக்கொண்டது.

இப் போட்டியில் மெசியின் பெனல்டி உட்பட இன்னும் இரண்டு கோல்போடும் வாய்ப்புகளைத் தடுத்த ஹன்ஸ் போர் ஹோல்டர்சன் ஆட்டநாயகனானார்.

 (என்.வீ.ஏ.)