சதோச நிறுவனத்திற்கு நிதி செலுத்தமால் பொருட்கள் கொள்வனவு செய்தமைக்கு முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக சட்டமா அதிபரால் குருநாகல் மேல் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சதோச நிறுவனத்திற்கு உரித்தான பொருட்கள் சிலவற்றை நிதி செலுத்தாமல் பெற்றுக்கொண்டமையால் அரசாங்கத்திற்கு 52 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, அவரது தனிப்பட்ட செயலாளர் மற்றும் சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற வடமேல் மாகாண சபை தேர்தலில் போது போட்டியிட்ட தனது மகனின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதோச நிறுவனத்தில் குறித்த பொருட்களை பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

2010 ஆம் ஆண்டிலிருந்து 5 வருட காலம் அவர் சொத்து விபரங்களை சமர்பிக்காமைக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.