மலையக சிறுவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளமையால் அரசாங்கம் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி அக்கரப்பத்தனை நல்லதண்ணி பகுதியில் மக்கள் ஆர்பாட்டம்.

பெருந்தோட்ட பகுதியில் சிறுவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் சிறுவர்களை பாதுகாக்க வேண்டும் என கோரி அக்கரப்பத்தனை நல்லதண்ணி தோட்ட சிறுவர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் இணைந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று மாலை முன்னெடுத்தனர்.

நல்லதண்ணி தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்னால் 200ற்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக பெருந்தோட்ட பகுதியில் உள்ள சிறுவர்கள் பாதுகாக்கப்படாமல் அவர்களுக்கு அச்சுறுத்தல் வரக்கூடிய சம்பங்களே அதிகமாக பதிவாகியுள்ளன.

சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் தற்கொலை, கடுமையான தண்டனை, சிறுவர்களை கடத்தல், விற்கப்படுதல், சட்ட முறையற்ற ரீதியில் சிறுவர்களை தத்தெடுத்தல், சிறுவர்களை தொழிலாளியாக பயன்படுத்துதல் போன்ற இன்னும் பல்வேறுப்பட்ட சிறுவர்களுக்கு துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதோடு, எதிர்கால சந்ததியினர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலையே தோன்றியுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அக்கர்ப்பத்தனை மன்றாசி தோட்டத்தில் சிறுமி ஒருவரை அரசியல்வாதி ஒருவரின் ஒத்துழைப்புடன் கடத்தி விற்பனை செய்ததாக கூறி 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சிறுவர்கள் தனிமையில் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு பயந்த நிலையில் இருப்பதும் காணக்கூடியதாக இருப்பதாகவும், மலையகத்தில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் கடத்தல் சம்பங்கள் இனிமேலும் வரக்கூடாது எனவும், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு உரிய தண்டனை நீதிமன்றத்தினால் வழங்கப்பட வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணித்தியாலயம் முன்னெடுக்கப்பட்டது.