இந்தியாவின் உதவியுடன் மத்தல விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் முட்டுக்கட்டைநிலையை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்தல விமானநிலையத்திற்கு மீண்டும் உயிரூட்டுவதற்கான முழுமையான வர்த்தக திட்டத்தை உருவாக்கும் பேச்சுவார்த்தைகளை இந்தியா இடைநிறுத்தியுள்ளதை தொடர்ந்தே இந்த நிலை உருவாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இலங்கை விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து இந்தியாவின் விமானப்போக்குவரத்து அதிகாரசபை இலங்கையுடன் இணைந்து வர்த்தக திட்டமொன்றை முன்னெடுக்க முன்வந்தது என இலங்கை அரசாங்க தரப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் வாக்குறுதியளித்தபடி இந்திய அரசாங்கம் இதில் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை,மத்தல விமானநிலையத்தை இணைந்து அபிவிருத்தி செய்வது குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்தல விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான யோசனையை கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியா முன்வைத்திருந்தது.

அதன் பின்னர் இந்திய விமானப்போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் இவ்வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு மதிப்பீடுகளை மேற்கொண்டிருந்தனர்.

மத்தல விமானநிலைய அபிவிருத்தி திட்டத்திற்கு 205 மில்லியன் டொலர்களை முதலீடு செய்ய இந்தியா முன்வந்திருந்தது.

ஏனைய 88 மில்லியன் டொலர்களையும் இலங்கை முதலீடு செய்யவேண்டும் எனவும் இந்திய தரப்பு கோரியிருந்தது.

இந்திய விமானபோக்குவரத்து அதிகாரசபை 40 வருட குத்தகையையும்; 70 வீத பங்கையும் கோரியிருந்தது.