நுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசெளகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசுக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தம் கொடுக்கும் முகமாக வவுனியா மாவட்ட சிவில் சமுக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

கடனைக் கொடுத்து குடும்பத்தைக் குலைக்காதே, வட்டியால் மக்களின் வயிற்றில் அடிக்காதே, பெண்களை சீரழிக்கும் நுண்கடன் நிறுவனங்களை இழுத்து மூடு, கடனில் பெண்களை இலக்கு வைக்காதே, உயிரைக் குடிக்கும் வார்த்தைகளை உமிழாதே.

 இழப்பதற்கு இனி எம்மிடம் உயிர் மட்டுமே உள்ளது, ஏழைகளின் உணர்வை புரிந்துகொள், வாழ்வதற்காய் கடன் பெற்றோம் வாழ்விழந்து நிற்கின்றோம், தற்கொலை அதிகரிப்பதற்கு கடனே நீயே காரணம், குடும்ப வன்முறைக்கும் கடன் நீயே காரணம், நுண் நிதி கடனே குடும்ப வன்முறைக்கு அத்திவாரம் இடாதே, கடனே இளம் சந்ததியை நரகத்தில் தள்ளாதே  போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய பஸ் நிலையத்தில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டமானது  பஜார் வீதி வழியாக சென்று ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை வந்தடைந்தது.

10நிமிடங்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்குரிய மகஜரை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சாந்தினி அவர்கள் பெற்றுக்கொண்டார்.