இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி காதர் மஸ்தானுக்கு வழங்கியதை கண்டித்து இந்து குருமார்கள் மட்டக்களப்பில் இன்று காலை காந்தி பூங்காவிற்கு முன்னால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்து குருக்கள்மார்கள்  இஸ்லாமிய விவகார பிரதி அமைச்சராக இந்து ஒருவர் நியமிக்கப்படுவாரா? இல்லையேல் இந்து மதவிவகாரத்திற்கு இஸ்லாமிய நபர் எதற்காக? அரசாங்கமே நீதி சொல்லு நீதி நியாயங்களை கடைப்பிடி , இந்து மக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள், ஆலையத்தை அழித்தீர் நிலைத்தையும் பிடித்தீர் இனி இந்து மக்களையும் அழித்தொழிப்பீரே, உடனடியாக கொடுத்த பதவியை இரத்துச் செய் , இன்று இந்துகுருமார் வீதிக்கு செல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது  என பதாதைகள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த நியமனம் ஒட்டுமொத்த இந்து மதத்தையும் தமிழர்களையும் அவமானப்படுத்தியுள்ளீர்கள், இந்த நாட்டில் சமாதானமும் நல்லாட்சியும் இடம்பெறவேண்டும் என்பதற்காக பல்வேறு அழுத்தங்கள் மத்தியில் இந்துமக்களாகிய நாங்கள் வாக்களித்து உங்களை அரியாசனததில் அமரச் செய்தோம், இதற்கு பரிகாரமாக இந்துகலாச்சார பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்து எம்மையும் எமது மதத்தையும் அவமானப்படுத்தியுள்ளீர்கள்.

இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாட்டால் தான் தமிழ் மக்கள்  இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது இதிலிருந்து இன்னும் முழுமையாக மீட்சி பெறாத நிலையில் இனப் போராட்டத்தோடு மதப்போராட்டத்தைக் கொண்டுவந்து எமது மக்களை நிம்மதியாகவும் சமாதனமாகவும் வாழ முடியாத நிலைக்கு தள்ளியுள்ளீர்கள். 

எனவே இந்த நியமனம் குறித்து ஜனாதிபதி இந்து தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும், உடனடியாக அமைச்சர் பதவியை இரத்து செய்து ஒரு இந்து மதத்தவருக்கு வழங்கவேண்டும்.

பெளத்தசாசன அமைச்சு பதவியை ஒரு இஸ்லாமிய நபருக்கு வழங்க முடியுமா? அது நிச்சயமாக முடியாது என்பது எங்களுக்குத் தெரியும் எனவே இது எமது இந்து மதத்தையும் தமிழர்களையும் பழிவாங்கும் நிகழ்வாகவே கருதுகின்றோம் என தெரிவித்தனர் 

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு சென்று அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான  மகஜர் கைளிக்க சென்றனர் ஆனால் நிர்வாக சேவை அதிகாரிகளின் பணிப்பஷ்கரிப்பால் அங்கு அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர்கள் கடமைக்குவராததன் காரணத்தினால் மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் குணநாயகத்திடம் மகஜரை கையளித்து பின்னர் ஆர்ப்பாட்டகாரர் கலைந்து சென்றனர்.