(நெவில் அன்தனி) 

மொஸ்கோவில் நடைபெற்ற கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் இலங்கை தூதுவர்களாக மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் இளம் வீரர்களான தினுக்க பண்டாரவும் மொஹமத் அயான் சதாத்தும் கலந்துகொண்டனர்.

211 நாடுகளைச் சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பங்குபற்றிய இந் நிகழ்ச்சியில் நட்புறவுக்கான சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளும் நடைபெற்றன.

தென் ஆபிரிக்கா, சிலி, பாஹ்ரெய்ன், சிங்கப்பூர், ஆர்மேனியா, இலங்கை ஆகிய நாடுகளின் இளம் வீரர்களை உள்ளடக்கிய லயன் அணியில் கோல்காப்பாளராக தினுக்க பண்டார விளையாடினார்.

மொஸ்கோ ஸ்பார்ட்டக் கால்பந்தாட்டப் பயிற்சியக மைதானத்தில் செவ்வாயன்று நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டிகளில் தினுக்க பண்டார இடம்பெற்ற லயன் கழகம் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதுடன் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது.

சீபூஜி அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் லயன் அணி 3 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது. பெண்டா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் துரதிர்ஷ்டவசமாக 0 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் லயன் அணி தோல்வி அடைந்தது.

மூன்றாவது போட்டியில் கோப்றா அணியை 3 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டபோதிலும் புள்ளிகள் அடிப்படையில இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை லயன் அணி தவறவிட்டது.

இளம் வீரர்களிடையே நட்புறவு, புரிந்துணர்வு, சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்க்கும் பொருட்டு பீபாவுடன் இணைந்து கெஸ்ப்ரோம் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இதேவேளை, இக் குழுவில் இடம்பெற்ற இலங்கையின் மற்றைய இளையவரான மொஹமத் அயான் சதாத், இளம் ஊடகவியலாளர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டார். இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அயான் சதாத் சிறப்புரை ஆற்றினார. 

இது இவ்வாறிருக்க, ரஷ்யாவில் நாளை ஆரம்பமாகவுள்ள 21ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் ஆரம்ப விழா வைபவத்தில் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிறுவர்கள் அனைவரும் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கையின் தினுக்க பண்டாரவும் அயான் சதாத்தும் இலங்கை கொடியுடன் இந்த ஆரம்ப வைபவத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் ரஷ்யாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உலகக் கிண்ணப் போட்டியையும் கண்டுகளிக்கவுள்ளனர்.

இவர்களுடன் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஸ்தாபகத் தலைவரும் பயிற்றுநருமான ஒகஸ்டின் ஜோர்ஜ், ஆலோசகர் முஹீத் ஜீரான் ஆகியோரும் ரஷ்யா சென்றுள்ளனர்.