(நா.தினுஷா)

நிலக்கரி கொள்வனவின் போது மேற்கொள்ளப்படும் மோசடிகள் மத்திய வங்கி ஊழலை  விட பாரிய மோசடியாகும். ஆகவே இந்த மோசடி தொடர்பில் விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

மாநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு      உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

நிலக்கரி கெள்வனவின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விஞ்ஞான பூர்வமான தகவல்களை என்னால் முன்வைக்க முடியும். ஆனால் அதற்கு முன்பாக அவ்வாறானதொரு பிரச்சினை உள்ளதை அனைவருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

2009 ஆம் ஆண்டு முதல் தனியார் நிறுவனமிடமிருந்து நிலக்கரி கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட உபாயங்கள் குறித்தும் நான் தெளிவுபடுத்தியுள்ளேன். அதேபோன்று 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நிலக்கரி கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடிகளின் விபரங்களை கணக்காய்வாளர் அறிக்கை மூலம் வெளிப்பிடுத்தியுள்ளார்.

கணக்காய்வாளரினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் நிலக்கரி கெள்வனவின்போது மோசடியில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

நிலக்கரி கொள்வனவின்போது மேற்கொள்ளப்படும் மோசடிகளானது மத்திய வங்கி பிணைமுறை மோசடியை விட பாரிய மோசடியாகும். எனவே ஜனாதிபதி இதை கவனத்திற் கொண்டு மோசடியில் ஈடுபட்டோர் குறித்து விசாரிப்பதற்கு விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றார்.