உள்ளூராட்சிமன்ற சபை நிதியினை பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத்திற்கு உட்பட்ட அபிவிருத்திகளை செய்வதற்கு தனது அனுமதி கிடைக்கும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளருக்கு எழுத்து மூலம் தெரிவத்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், 

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட  பிரதேசங்களில் பெரும்பாலான வீதிகள் இரவு வேளைகளில் இருளில் மூழ்கியிருப்பதுடன் போக்குவரத்து இடர்பாடுகளை முழுமையாக கொண்டுள்ளதால் இத் தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்கு ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்கித் தருவதற்கு ஆவண செய்யுமாறு நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி மாகாண நிர்வாகமும் கிராம அபிவருத்தி, வீதி அபிவருத்தி மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் மூலம்  கோரிக்கையினை முன்வதை்திருந்தேன்.

குறித் கோரிக்கைக்கு வடமாகாண முதலமைச்சர் வீதிகளுக்கு வெளிச்ச வசதி வழங்கி பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டியது உள்ளூராட்சி மன்றங்களின் சமூக பொறுப்புடையதாகும். 

எனவே குறித்த தேவைப்பாட்டினை நிறைவு செய்வதற்கு தங்கள் சபையின் சபை நிதியைப் பயன்படுத்துவது பொருத்தமானதாகும். இதனால் சபை நிதியில் இருந்து ஒரு மில்லியன் ரூபாவை பயன்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது அனுமதி தேவைப்படும் என்று அதற்கான அனுமதி கோரிக்கையினை உரிய நிர்வாக அலகுகள் ஊடாக அனுப்பி எனது அனுமதியைப் பெற்று மேற்படி வேலைத்திட்டத்தினை தாமதமின்றி நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என கடிதம் மூலம் தெரிவத்துள்ளார். 

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சருடைய கடிதம் வலிமேற்கு பிரதேச சபையின் கூட்டத்தில் முன்வைத்து சபை நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் தெரிவத்தார்.