கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள வைத்தியசாலையில் தற்போது இரண்டு தாதியர்கள் மாத்திரம் பணியில் ஈடுபட்டுள்ளதால் வைத்திய சேவையை தொடர்ந்து வழங்குவதில் சிக்கல் தோன்றியுள்ளது.

இவ்வாறு தொடர்ச்சியாக சேவையில் ஈடுபட்டுள்ள தாதியர்கள் இருவரும் கணவன், மனைவி என்பதனால் அவர்களும் சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்  குமாரவேல் குறிப்பிடுகையில்,

தர்மபுரம் வைத்தியசாலை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அடுத்தாக அதிகளவு நோயாளர்கள் சிகிச்சை பெற்று செல்கின்ற வைத்தியசாலையாகும்.

இந் நிலையில் குறித்த வைத்தியசாலையில் நான்கு தாதியர்கள்  கடமையில்  இருக்க வேண்டும்  ஆனால் தற்போது இரு தாதியர்கள் மாத்திரம் சேவையில் உள்ளனர். இதனால் முழுமையான சேவையினை வழங்க முடியாதுள்ளது.

அத்துடன் ஏற்கனவே ஓய்வுபெற்ற  தாதியயொருவரை சேவையில் இணைத்துக் கொண்டபோதும் அவருக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்காத காரணத்தினால் அவரும் பணியிலிருந்து நின்று விட்டார். 

எனவே தர்மபுரம் வைத்தியசாலையில் நிலவுகின்ற ஆளணிப்பற்றாக்குறையை தீர்க்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.