சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை தங்க பிஸ்கட்டை  இலங்கைக்கு கடத்திவர முயன்ற இலங்கை பிரஜையொருவரை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கல்முனையை சேர்ந்த  39 வயதானவராவார்.

குறித்த நபர் சுமார் பத்து வருடமாக கட்டாரில் அரச துறையில் கடமையாற்றியவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.    

இன்று அதிகாலை  2.45 மணியளவில் கட்டாரிலிருந்து  கட்டுநாயக்கா வந்த 668 என்ற விமானம் மூலம் குறித்த நபர் இலங்கைக்கு வந்துள்ளனர். 

குறித்த நபர் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்து விமான நிலையத்திருந்து வெளியேறும் போது, அவர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், குறித்த நபர் வைத்திருந்த பயணப்பையை சோதித்த போது அதிலிருந்து சுமார் 5 தங்க பிஸ்கட்களை கைப்பற்றியதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.   

குறித்த நபரிடமிருந்து 291.55 கிராம் தங்க பிஸ்கட்டுகளை மீட்டுள்ளதாகவும் இவ்வாறு மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 17 இலட்சத்து 49 ஆயிரத்து 300 ரூபாவெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.