600 அகதிகளுடன் சென்ற கப்பலை இத்தாலி அரசாங்கம் தனது துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்காததனால் அவர்களின் நிலை நிர்க்கதிக்குள்ளாகியுள்ளது. 

மனிதாபிமான மருத்துவ சேவைகளை செய்துவரும் பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அகுவரைஸ் என்ற  கப்பலொன்று 600 அகதிகளுடன் நேற்று மத்திய தரைக்கடல் பகுதியின் மோல்டாவிலிருந்து 27 மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. 

இந் நிலையில் அந்தக் கப்பலில் இருந்த 600 அகதிகளை ஏற்குமாறு கப்பலின் அதிகாரிகள் கோரிய போதும் இத்தாலி அரசாங்கம் அவர்களை ஏற்க மறுத்துவிட்டதுடன் கப்பலைத் தனது துறைமுகத்தில் நிறுத்துவதற்கும் அனுமதிக்கவில்லை. 

இது தொடர்பில் ஐ.நா.வின் அகதிகள் பிரிவு அதிகாரிகளும், ‘‘அகுவைரஸ் கப்பலை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி அளித்து கப்பலில் ஆதரவற்ற 123 சிறுவர்கள், சிறுமிகள், 6 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 600 பேரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணுங்கள்’’ என்று இத்தாலிக்கு கோரிக்கை விடுத்தனர். 

எனினும், ஐ.நா.வின் கோரிக்கையையும் நிராகரித்துவிட்ட இத்தாலி அரசாங்கம், கப்பலில் உள்ள அகதிகள் மோல்டாவில் இறங்கட்டும் என்று கூறிவிட்டது. 

அத்துடன் மோல்டாவும் குறித்த 600 அகதிகளை ஏற்க மறுத்துவிட்ட நிலையில் அவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளதுடன் அவர்களை சுமந்துகொண்டு மத்திய தரைக்கடலில் கப்பல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.