மூல நோயினை கண்டரிவதற்கு புதிய பரிசோதனை முறை கண்டறியப்பட்டுள்ளது

எம்மில் பலரும் பெரும்பாலான நேரங்களில் அசையாமல் ஒரேயிடத்தில் அமர்ந்து பணியாற்றுவதாலும், உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சியை குறைத்துக் கொண்டதாலும், பசித்தால் எந்த நேரத்திலும் எதையேனும் சாப்பிடுவதாலும் மூல நோய் உருவாகிறது.

ஆசனவாயின் உட்புறமாகவும், மலக்குடலில் இறுதிப்பகுதியிலும் சுருக்கு தசைகள் அமையப்பெற்றுள்ளன. இந்த தசைகளின் செயல்பாடுகளில் ஏதேனும் இடையூறுகள் ஏற்படும் போதும்,இந்த தசைகளின் உட்புறமுள்ள சிறிய அறைகளில் ஏற்படும் வீக்கத்தின் காரணமாகவும் மூல நோய் ஏற்படுகிறது. இதனைக் காணும் மருத்துவர்கள் உள்மூலம், வெளிமூலம் என்று வகைப்படுத்துவர்.

ஆசனவாயிலில் அதிக வலி, எரிச்சல், அரிப்பு, வலியுடன் கூடிய வீக்கம், வாயு முறையற்ற வகையில் பிரிதல், மலத்துடன் இரத்த கசிவும் ஏற்படுதல், அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல், வயிறு உப்புசம் என இதன் அறிகுறிகள் ஏராளம். இருந்தாலும் பாதிக்கப்பட்டிருப்பது மூலம் தானா? என்பதை அறிய பிராக்டோஸ்கோபி என்ற பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இந்த பரிசோதனையில் மூல நோயின் அனைத்து தன்மைகளையும், அதன் வீரியத்தையும் துல்லியமாக அவதானிக்கலாம்.

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையிலுள்ளவர்களுக்கு நாளாந்த உடற்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவற்றை தொடர்ச்சியாக முப்பது நிமிடம் மேற்கொள்வது, நார்சத்துள்ள பொருள்களை உண்பது, காரம் மற்றும் மசாலா சேர்க்கப்பட்ட உணவு பொருளை முற்றாக தவிர்ப்பது போன்ற எளிய நடைமுறைகளை உறுதியாக பின்பற்றினால் மூல நோயிலிருந்து விடுபடலாம்.

டொக்டர் மாறன்.

தொகுப்பு அனுஷா.