"பெயர்களை வெளிப்படுத்தாவிடின் அனைவர் மீதும் தவறான பார்வை ஏற்படும்"

By Vishnu

11 Jun, 2018 | 04:32 PM
image

(ஆர்.யசி)

அலோசியஸுடன் தொடர்புடைய நிதி நிறுவனங்களிலிருந்து பணம் பெற்றுக்கொண்ட 118 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் அனைத்து உறுப்பினர்கள் மீதும் தவறான பார்வை ஏற்படுவதை தடுக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார். 

கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே மத்திய வங்கி பிணைமுறி ஊழல் இடம்பெற்றது. மத்திய வங்கி ஊழல் இடம்பெற்றமை தெரிந்தவுடனேயே நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து உண்மைகளை கண்டறியவும், அதற்காக மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பதவி  நீக்கம் செய்து சுயாதீனமாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினோம். 

எனினும் உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. இதனை அடுத்தே கோப் குழுவின் மூலமாக உண்மைகளை வெளிக்கொண்டுவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டது. கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் ஜே.வி.பி.யின் உறுப்பினர்கள் அனுரகுமார திசாநாயக, பிமல் ரத்நாயக, நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோர் இணைந்து உண்மைகளை வெளிக்கொண்டுவரும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 

எனினும் கோப் அறிக்கையை மூடி மறைக்க ஏனைய நபர்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர். இருப்பினும் அதையும் தாண்டி நாம் இந்த அறிக்கையை வெளிக்கொண்டுவந்து உண்மைகளை வெளிப்படுத்தியபோது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்தனர்.

இதன் பின்னரே ஜனாதிபதி தலையிட்டு மத்திய வங்கி ஊழலை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். அதிலும் பல உண்மைகள் வெளிவந்தன. 

இந்த மோசடியில் ஜே.வி.பி.யின் உறுப்பினர்களும் பணம் பெற்றதாக பொய்யான காரணிகளை கூறி மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை சிலர் முன்னெடுத்து வருகின்றனர். எனினும் கோப்  குழுவில் உள்ள ஜே.வி.பி.யின் உறுப்பினர்கள் நான்கு பேரும் பணம் பெறவில்லை என இரகசிய பொலிஸ் அறிக்கை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் உள்ளது. 

ஆணைக்குழுவின் அறிக்கையை கையில் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அதில் எத்தனை பக்கங்கள் உள்ளது என்பதை தெரிவித்தார். எனினும் பாராளுமன்றத்தில்  கொடுக்கப்பட்ட அறிக்கையில் நூற்றுக்கணக்கான பக்கங்கள் மறைக்கப்பட்டுள்ளது. 

ஆகவே சில பக்கங்களை ஜனாதிபதி மறைத்தார் என்பது இப்போது வெளிப்படையாக தெரிந்துள்ளது. எனவே  இப்போதாவது அதனை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right