கிழக்கு மாகாண அரச பாடசாலைகளில் தமிழ்மொழி மூல விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதில் இடம்பெற்ற  இன ரீதியான பாரபட்சம் குறித்து மத்திய கல்வி அமைச்சுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளுக்கு 216 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை நியமிக்கவுள்ளனர். இவர்களில் 88 பேர் தமிழ் மொழி  மூலமும் 128 பேர் சிங்கள மொழி மூலமும் நியமிக்கப்படவுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளே அதிகம் உள்ளதையும் அதற்கு  மாறாக குறைவாக உள்ள சிங்கள மொழிமூலப் பாடசாலைகளுக்கு அளவுக்கு அதிகமான ஆசிரியர்கள் நியமனம் செய்ய பட்டியல் வெளியாகியிருக்கும் விடயத்தையும் மத்திய அரசின் நிரல் கல்வி அமைச்சின் ஆட்சேர்ப்பு பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். 

இதன் காரணமாக அவர்கள் மேலும் 73  தமிழ் மொழிமூல விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர் என்றார்.