மட்டக்களப்பு, மாவடிவேம்பு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாவடிவேம்பு சம்பந்தர் வீதியைச் சேர்ந்த மேகராசா யோகராசா (வயது 26) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நான்கு நுண்கடன் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக மேலும் ஒரு நுண்கடன் நிறுவனத்தில் கடன் பெற்றுத்தருமாறு மனைவியிடம் கோரியுள்ளதாகவும் இனிமேல் கடன் பெற முடியாது என மனைவி மறுப்பு தெரிவித்தமையினால் மனைவியுடன் சண்டையிட்டு கோபத்தில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.