(ஆர்.ராம்)

தெற்காசிய பொருளாதார நிலைமை கள் மற்றும் சீனாவின் பொருளாதர வளர்ச்சி , எதிர்கால நிலைமைகள் தொடர்பில் இந்­திய நிதி அமைச்சின் முன்னாள் இணைச் செய­லாளர் கே.சுப்­பி­ர­ம­ணியன் "கேசரி"க்கு வழங்­கிய நேர்­காணலின் முழுவடிவம் வருமாறு:

வெளிநாட்டு வர்த்­தகம் என்­றாலே அச்சம்

1949 ஆம் ஆண்டு சீனா கம்­யூனிஸ ஆட்சி நாடா­கின்­றது. அச்­ச­ம­யத்தில் சீன ஆட்­சி­யா­ளர்களுக்கு தமது நாடு உலகில் எந்­த­ நாட்­டு­டனும் உற­வினைக் கொண்­டி­ருக்­காது அனைத்­தையும் தமது நாட்­டுக்­குள்ளே தாமே கையா­ள­வேண்டும் என்ற நிலைப்­பாடு காணப்­பட்­டது. பொது­வாக கால­னித்­து­வத்தின் அனு­ப­வத்­தைப் பெற்­றி­ருந்த சீனா போன்ற கம்­­யூனிஸ நாடுகள் தமது நாட்டின் வளங்­க­ளையும் மூலங்­க­ளையும் ஏகா­தி­பத்­திய நாடுகள் எடுத்துச் சென்­று­வி­டு­ம் என்ற நிலைப்­பாட்­டி­லேயே செயற்­பட்­டன. இதன் கார­ணத்தால் வெளிநாட்டு வர்த்­தகம் என்­பதை முழு­மை­யாக எதிர்த்­தன. ஒரு­வேளை வெளிநா­டு­க­ளுடன் வர்த்­தக ரீதி­யான உற­வு­களைப் பேண விரும்­பினால் சோவியத் குடி­ய­ரசுடன் மட்­டுமே அத்­த­கைய உற­வு­களை மேற்­கொண்­டன. 

உறவு முறிந்­ததால் மாறிய சிந்­தனை

குறிப்­பாக சீனா­வுக்கும் ரஷ்­யா­வுக்கும் (சோவியத் குடி­ய­ர­சாக இருந்து மாற்­ற­ம­டைந்­தது) இடையில் வர்த்­தக ரீதி­யாக உற­வுகள் வலு­வாக காணப்­பட்­ட­போதும் சுமார் பத்­தாண்­டுகள் வரையில் தான் அந்த உற­வுகள் நீடித்­தி­ருந்­தன. அதன் பின்னர் அந்த உற­வு­களில் முரண்­பா­டுகள் ஏற்­ப­டவும் சீன –ரஷ்ய உற­வுகள் முறி­வ­டைந்­தன. இந்த நேரத்தில் தான் சீனா தன்­னு­டைய வெளியு­ற­வுக் கொள்ை­ககளை மீள்­ப­ரி­சீ­லனை செய்த­தோடு தொடர்ந்தும் ரஷ்­யா­வுடன் தன்னை மட்­டுப்­ப­டுத்தாது அடுத்த கட்­டங்­களை ஆராய ஆரம்­பித்­தது. இவ்­வாறு வர்த்­தக ரீதியில் சீனா­வுக்கும் ரஷ்­யா­வுக்கும் பனிப்போர் ஆரம்­ப­மா­னது.

எதி­ரிக்கு எதிரி நண்பன்

சீன–ரஷ்ய பனிப்­போரை அவ­தா­னித்த அமெ­ரிக்­காவின் அப்­போ­தைய அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் இந்த வாய்ப்­பினைப் பயன்­ப­டுத்தி சீன–ரஷ்ய உற­வு­களை நிரந்­த­ர­மாகப் பிரிக்க வேண்டும் என்ற திட்­டத்­தைத் தீட்­டிக்­கொண்டு பாகிஸ்தான் வழி­யாக சீனா­வுக்கு இர­க­சி­ய­மான பய­ணத்தை முதன்­மு­த­லாக மேற்­கொண்டார். இதன்மூலம் அமெ­ரிக்­கா­வுக்கும் சீனா­வுக்குமிடையில் 20 ஆண்டு கால­மாக நீடித்த தொடர்­பா­ட­லற்ற நிலைமை முடி­வுக்கு வந்தது. இந்த விஜ­யத்தின் பின்னர் புதிய சீனக் கொள்கை என்ற தொனி­யுடன் உற­வு­களை நிக்ஸன் ஆரம்­பித்தார். 

சந்­தே­கத்­துடன் மாறிய சிந்­தனை

இத் தரு­ணத்தில் தான் சீனாவின் ஜனா­தி­ப­தி­யாக இருந்த டெங் சியோ பிங், சிந்­தித்தார். வெளிநா­டு­க­ளுடன் உற­வு­களை வைப்­பதால் சீனா­வுக்கு நன்மை ஏற்­ப­டுமா என்ற சந்­தே­கத்­துடன் ஒரு­த­டவை முயற்சி எடுத்­துப்­பார்ப்போம் என்ற முடி­வுக்கு வந்தார். இவ்­வா­றான மாற்­றத்தின் மூலமே சீனா முதன்­மு­த­லாக சர்­வ­தேச வர்த்­தகம் மற்றும் சர்­வ­தேச பொரு­ளா­தாரம் ஆகி­ய­வற்­றுக்குள் கால­டி­யெ­டுத்து வைத்தது. மாவோ சே துங், சீனாவின் பொரு­ளா­தா­ரத்­தை நவீ­னத்­து­வத்­துடன் உல­குக்கு அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும் என்­ப­திலும் உறு­தி­யாக இருந்தார். 

முன்­ன­தா­கவே சீனா­வா­னது தனது நாட்டில் கைத்­தொழில்துறை, சுங்­கத்­தொ­ழில்­துறை போன்­ற­வற்றில் அதி­க­ளவு முத­லீ­டு­களை செய்­தி­ருந்­த­மை­யால் அவ்­வா­றான துறைகள் அதீத வளர்ச்சி மட்­டத்திலிருந்­தன. அதீத உள்­நாட்டு முத­லீட்டின் கார­ண­மாக சீனாவின் உள்­ளக கட்­ட­மைப்பில் பாரிய வளர்ச்­சியும் ஒருங்கே காணப்­பட்­டது. தன்னை சுய­ப­ரி­சீ­ல­னைக்குட்­படுத்­திய சீனா மிகை முத­லீ­டு­களை நாட்­டுக்குள்  செய்து விட்டோம் என்­ப­தையும் உணர்ந்து கொண்டது. 

இதன்­ கா­ர­ண­மாக 1985 ஆம் ஆண்டு சீனா உலக வர்த்­தக அமைப்புடன் தன்னை இணைத்­துக்­கொண்டு பய­ணிக்க ஆரம்­பித்தது. முதலில் 10 ஆண்­டு­க­ளுக்கு இணைந்து செல்­வ­தாக சீனா­வுடன் ஒப்­பந்தம் செய்­யப்­ப­ட்டது. அதன் பின்னர் உலக வர்த்­தக அமைப்பு கடு­மை­யான நிபந்­த­னை­க­ளை சீனா மீது பிர­யோ­கித்­த­போதும் மாவோ சே துங் "சீனாவை உல­கத்­துடன் இணைத்தே தீருவேன்" என்ற தனது இலக்கில் உறு­தி­யாக இருந்­த­மையால் அவற்றை சுமு­க­மாகக் கையாண்டார். அத்­துடன் நிக்­ஸனின் சீன விஜ­யத்தின் மூலம் ஏற்­பட்ட சீன–அமெ­ரிக்க உறவால் சீனா­வுக்­கான சந்தை வாய்ப்பு வச­தியை சீனா முழு­மை­யாக வழங்­கி­யது. 

எவ்­வாறு வெற்றிபெற்­றது முதல் முயற்சி?

உலக வர்த்­தக அமைப்­புடன் ஒப்­பந்தம் செய்­வ­தற்கு முன்­ன­தாக சீனா முக்­கிய சில விட­யங்­களை முன்­னெ­டுத்­தது. சீன முத­லீ­டு­களில் தனியார் சொத்­துக்கள் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை. அர­சாங்­கத்தின் மூலங்­களும் வளங்­க­ளுமே காணப்­பட்­டன. மக்­க­ளி­டத்தில் மிகை­யான சேமிப்பு காணப்­பட்­டாலும் வங்­கி­களில் பணத்­தை சேமிக்கும் வழக்­கத்­தை அவர்கள் கொண்­டி­ருக்­க­வில்லை. அர­சாங்கம் சேமிப்­புக்­கான வழி­களை ஏற்­ப­டுத்­தி­னாலும் அவர்கள் முத­லி­டு­வ­தற்குத் தயா­ராக இல்லை. அது அபி­வி­ருத்தி குறைந்த காலம் என்­பதால் தமது எதிர்­கா­லத்தைக் கருத்­தில் ­கொண்டு அர­சாங்­கத்தின் மீது அவ­நம்­பிக்­கை­யு­டனேயே இருந்­தார்கள். 

எனினும் டெங் சியோ பிங், மக்­க­ளுக்­கான புரி­தலை ஏற்­ப­டுத்­தினார். மக்­க­ளுக்­கான உத்­தர­வா­தத்­தையும் அவரே அளித்தார். அத்­துடன் ஒவ்­வொ­ரு­வ­ரி­ன் பெய­ரி­லுமே நிதியை வைப்­பி­லி­டுங்கள் என்றும் அறி­வுரை வழங்­கினார். இதன் கார­ணத்தால் சீனாவில் 90 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான மக்கள் தாமாக வந்து வங்­கி­களில் சேமிப்புக் கணக்­கு­களை ஆரம்­பித்­தனர். இதன் கார­ணத்தால் பெருந்­தொ­கை­யான நிதி கிடைத்­தது. அந்த நிதியைப் பயன்­ப­டுத்தி முழு­நாட்­டிலும் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­தி­னார்கள். போக்­கு­வ­ரத்து, தொடர்­பாடல், கட்­ட­ட ­வ­ச­திகள், மின்­சாரம் என அனைத்து விட­யங்­க­ளையும் உயர்த்­தி­னார்கள். தம்மு­டைய உற்­பத்­திப்­பொ­ருட்கள், தொழி­லா­ளர்கள் என அனைத்தும் உள்­நாட்டு வளங்­களை மட்­டுமே பயன்­ப­டுத்தி உட்­கட்­ட­மைப்­பினை உயர்ந்த தரத்தில் கட்­டி­யெ­ழுப்­பி­னார்கள்.

இது­மட்­டு­மன்றி 1978 ஆம் ஆண்டு முதல் சீனா தனது கடற்­கரைப் பகு­தி­களை வெளிநா­டு­களின் நேரடி முத­லீ­டு­க­ளுக்­காக திறந்து விட்­டது. 1997ஆம் ஆண்டு வரை சீனா இதனைப் பின்­பற்­றி­யதால் 85 சத­வீ­த­மான முத­லீ­டுகள் கிடைக்­கப்­பெற்­றன. இவ்­வாறு வெளிநா­டு­களின் முத­லீ­டு­க­ளுக்­காக சீனாவின் கத­வுகள் திறந்­த­மை­யா­னது அதற்கு மேலும் வாய்ப்­பாக அமைந்­தது. அதே­நேரம் இக்­கா­லப்­ப­கு­தியில் இரட்டை நாணயப் பரி­மாற்றம் என்ற கொள்­கையை பின்­பற்றிய நிலையிலும் மாற்­றம் ஏற்­ப­ட்டது. வர்த்­தகம் மற்றும் உள்­நாட்டு நிதி ஆகி­ய­வற்­றுக்­காக நிலை­யான ஒற்றை நாணயக் கொள்­கை­யையே பின்­பற்­று­வ­தென்றும் தீர்­மா­னித்­தது. 

அனைத்­தையும் அள்ளிச் சென்ற அலை

அமெ­ரிக்­கா­வுக்கு மட்டும் தனது உற்­பத்­தி­களை ஏற்­று­மதி செய்­து­கொண்­டி­ருந்த சீனா, ஐரோப்­பிய ஒன்­றியம் உள்­ளிட்ட 10 நாடு­க­ளுக்கு தனது ஏற்­று­ம­தியை உட­ன­டி­யாக விரி­வு­ப­டுத்தியது. இத்­த­கைய செயற்­பா­டு­களால் அமெ­ரிக்­காவில் இயங்கி வந்த பல்­தே­சிய வர்த்­தக நிறு­வ­னங்­களின் பார்­வை சீனாவை நோக்கித் திசை­ தி­ரும்­பி­ய­தோடு மட்டும் நின்­று­வி­டாது அந்த மண்ணை நோக்கி நக­ரவும் ஆரம்­பித்­தன. 

உதா­ர­ண­மாகக் கூறு­வ­தாயின் "வோல்மார்ட்", "ஹேன்ஸ்" போன்ற பாரிய வர்த்­தக நிறு­வ­னங்கள் சீனா­வுக்கு தம்மை விரி­வு­ப­டுத்­தின. இதன் கார­ணத்தால் "அடிடாஸ்" போன்ற நிறு­வ­னங்கள் விலைக்­கு­றைப்­பினை செய்ய வேண்டாம் என்று "வோல்­மார்ட்"­ இடம் கோரி­ய­போதும் அது வெற்­றி­பெ­ற­வில்லை. மாறாக உங்கள் நிறு­வ­னங்­களை சீனா­வுக்கு மாற்­றுங்கள் என்று "வோல்மார்ட்" போன்ற நிறு­வ­னங்கள் விடுத்த பணிப்­பு­ரையே நடை­மு­ைறச்­சாத்­தி­ய­மா­னது. இதனால் அமெ­ரிக்­காவில் இயங்­கி­வந்த "அடிடாஸ்" உட்­பட நூற்­றுக்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்கள் சீனாவை நோக்கிப் படை­யெ­டுத்­தன.

கெஞ்­சலும் மிஞ்­சலும் 

இதன்­கா­ர­ண­மாக சந்­தை­வாய்ப்­பினை அளித்து சீனா­வுக்கு நவீன பொரு­ளா­தாரப் பிர­வே­சத்­துக்கு வாய்ப்­பினை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்த அமெ­ரிக்கா சீனாவின் மீது கோப­ம­டைந்­தது. நிலை­யான ஒற்றை நாணயக் கொள்­கையின் கார­ண­மாக நாணயப் பெறு­மதி விகிதம் குறைக்­கப்­ப­டு­வ­தோடு உற்­பத்­திகள் மீது குறை­ம­திப்­பீ­டு­களே இடம்­பெ­று­வ­தா­கவும் சீனா­வி­டம் தெரி­வித்த அமெ­ரிக்கா, உட­ன­டி­யாக இந்த நிலை­மை­களை மாற்ற வேண்டும். அதற்­காக நிலை­யற்ற நாணயக் கொள்­கையை அதா­வது சந்­தை­ நி­லை­மை­களை அடி­யொற்­றிய நாண­யக்­கொள்­கையை சீனா பின்­பற்ற வேண்டும் என்றும் நேர­டி­யா­கவே வலி­யு­றுத்­தி­யது. இருப்­பினும் சீனா அதற்கு மறு­த்­து­விட்­டது. 

மறு­த்­த­துடன் நிறுத்­தாத சீனா அதற்­கான உரிய கார­ணங்­க­ளையும் தெளிவுபடுத்­தி­யது. அதா­வது யுவான் மூலம் உற்­பத்­தி­க­ளுக்­கான விலை­களைக் குறைத்து மதிப்­பீடு செய்­ய­வில்லை. மாறாக நிலை­யான பொரு­ளா­தாரம், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி மற்றும் ஆசிய நாடு­களின் நாணய மதிப்பு ஸ்திரத்­தன்மை ஆகி­ய­வற்­றுக்­கா­கவே யுவா­னுக்கு நிலை­யான மதிப்­பொன்று பின்­பற்­றப்­ப­டு­கின்­றது என்று சீனா தனது வாதத்தை முன்­வைத்­தது. 

இருப்­பினும் பின்­ன­ரான காலங்­களில் சர்­வ­தேச நாணய நிதி­ய­மா­னது சீனாவின் யுவான் மற்றும் ஆசிய நாடு­களின் பொரு­ளா­தார நிலை­மைகள் தொடர்பில் நேர­டி­யான ஆய்­வு­களை மேற்­கொண்ட போது சீனாவின் வாதத்திலுள்ள நியா­யத்­தை உணர்ந்து கொண்­டது. அத்­துடன் அமெ­ரிக்­கா­வுக்கும் சீனா­வுக்குமிடையில் நீடித்­தி­ருந்த நாண­யக்­கொள்கை சார்ந்த முறுகல் நிலை­மை­யா­னது முடி­வுக்கு வந்­தி­ருந்­தது.

தந்­தி­ர­மான கொள்கை

அதற்கு அடுத்த காலப்­ப­கு­தியில் சீனா ஏனைய நாடு­க­ளுடன் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தங்­களை கைச்­சாத்­திடும் கொள்கையை பின்­பற்ற ஆரம்­பித்­தது. அதன் முதல் ­கட்­ட­மாக 2000ஆம் ஆண்டு ஆசியான் அமைப்­புடன் ஒப்­பந்­தத்தை சீனா செய்­து­கொண்­டது. அதன் பின்னர் தற்­போது வரையில் சீனா நூற்­றுக்கும் மேற்­பட்ட நாடு­க­ளுடன் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தங்­களை செய்­துள்­ள­தோடு பல நாடு­க­ளுடன் அவ் ஒப்­பந்­தத்தை மேற்­கொள்­வ­தற்­கான இறுதி நிலை­மை­களும் காணப்­ப­டு­கின்­றன. மேலும் சில நாடு­களும் சீனா­வுடன் கைகோர்ப்­ப­தற்கு சிந்­திக்­கின்ற நிலை­மை­களும் ஏற்­பட்­டுள்­ளன. 

சீனாவின் சுதந்­திர ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்ளும் கொள்­கையில் பொரு­ளா­தார நலன்­களைத் தாண்டி அர­சியல் ஆதாயம் ஈட்­டு­கின்ற போக்கும் உள்­ளது. ஒப்­பந்­தங்கள் இடம்­பெற்ற பின்னர் அதில் கிடைக்­கின்ற வரு­மா­னத்­தை சீனா மீண்டும் அந்த நாட்­டி­லேயே முத­லி­டவோ அல்­லது கட­னாக வழங்­கவோ தான் அதி­க­மாக முயற்­சிக்கும். தற்­போ­தைய சூழலில் அனைத்து ஆசிய நாடு­க­ளுக்கும் அவர்­களின் வரவு –செல­வுத்­திட்­டங்­களில் உள்ள கடன்­ப­டு­தொ­கையை குறைக்க வேண்­டி­யுள்­ளதால் நிதித்­தேவை அதி­க­மா­க­வுள்­ளது. ஆகவே அந்­த­ நா­டு­களும் கடன்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கே எதிர்­பார்ப்­புடன் இருக்­கின்­றன. 

மேலும் இத்­த­கைய நாடுகள் தமது உட்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டையும் எதிர்­பார்ப்­பதால் சீனா­வுக்கு இல­கு­வாக தனது வெளிநாட்டு முத­லீட்டுக் கொள்­கையை முன்­னெ­டுத்துச் செல்ல முடிந்து விடு­கின்­றது. இச் செயற்­பா­டுகள் அனைத்­துமே இயல்­பா­கவே உள்­நாட்டு அர­சி­யலில் தலை­யீ­டு­களை செய்­வ­தற்கு இட­ம­ளிப்­ப­தாக அமைந்து விடு­கின்­றன. இதன் ­கா­ர­ண­மா­கவே சீனா தன­து ­பொ­ரு­ளா­தார பலத்­தைப் பயன்­ப­டுத்தி அர­சி­யலில் தலை­யீ­டு­களை மேற்­கொள்­கின்­றது. இது சீனாவின் "பொரு­ளா­தார உதவி வழி இரா­ஜ­தந்­திரம்" என அழைக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை சீனா­வா­னது பல்­தே­சிய நிறு­வ­னங்­க­ளுக்­கான வாய்ப்­புக்­களை தனது நாட்­டுக்குள் சுதந்­தி­ர­மாக ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கின்­றது. இதன்­மூலம் தனது உற்­பத்­தியை அதி­க­ரித்து ஏற்­று­ம­தியை மிகப்­பெ­ரு­ம­ளவில் அதி­க­ரிக்­கின்­றது. உதா­ர­ண­மாக கூறு­வ­தானால் ஐ-போன்­களை தற்­போது சீனா ஏற்­று­மதி செய்­கின்­றது. ஆனால் ஐ-போனில் ஏற்­று­ம­தியை செய்யும் சீனா சார்­பான மதிப்­புத்­தொகை 2 சத­வீ­த­மாக மட்டும் தான் உள்­ளது. இதனை விடவும் உற்­பத்தி மூலப்­பொ­ருட்கள், பகுதியளவில் நிறை­வ­டைந்த உற்­பத்­திகள் என சீனா அனைத்து விட­யங்­க­ளையும் முன்­னெ­டுத்­தது. 

இந்த விட­யத்தில் இந்­தியா தவ­றி­ழைத்து விட்­டது. இந்­தி­யா­வுக்கு உற்­பத்தி முடி­வுப்­பொ­ருட்­களை ஏற்­று­மதி செய்­வதில் விலை­நிர்­ணயம் தொடர்­பான பிரச்­சி­னைகள் காணப்­பட்­டன. இந்­தி­யாவிலுள்ள கைத்­தொழில்துறையும் பாரி­ய­ளவில் உற்­பத்­தியை மேற்­கொண்டு ஏற்­று­ம­தியை மேற்­கொள்­வதில் முழு­மை­யான பலத்­துடன் இருக்­க­வில்லை. அத்­துடன் மூலப்­பொ­ருட்­களை ஏனைய நாடு­க­ளுக்கு விநி­யோகம் செய்­வ­திலும் அதி­க­ளவு கவனம் செலுத்­த­வில்லை. இவ்­வா­றான நிலை­மைகள் கடந்த 8 வ­ரு­டங்­க­ளாக நீடித்­தி­ருந்­தன. ஆகக்­கு­றைந்­தது சீனா­வுக்கு மூலப்­பொ­ருட்­களை விநி­யோ­கிக்கும் செயற்­பாட்டைக் கூட அந்நாடு முன்­னெ­டுத்­தி­ருக்­க­வில்லை.  

வல்­ல­ரசின் மீதுள்ள ஆதிக்கம்

4 ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக அமெ­ரிக்­கா­விடம் 4 ரில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களே சீனா சார்ந்த கையி­ருப்­பாக இருந்­தது. தொடர்ச்­சி­யான காலத்தில் சீனாவின் யுவானின் சம­நி­லைத்­தன்­மையும் வெளி நாட்டு முத­லீ­டு­களும் அத் தொகையை தற்­போது 3.33 ரில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளா­கி­யுள்­ளது. அமெ­ரிக்­காவில் சீனா­வுக்­குள்ள கையி­ருப்­பா­னது பாரிய நன்­மை­க­ளையே அளித்­தி­ருக்­கின்­றது. அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில் சீனாவின் அக் ­கை­யி­ருப்புத் தொகை­யா­னது அமெ­ரிக்­காவின் வர­வு­–செ­ல­வுத்­திட்­டத்தில் துண்டு விழும் தொகையை வெகு­வாகக் குறைப்­ப­தா­கவே உள்­ளது. 

ஆகவே அமெ­ரிக்­கா­வுக்கு சீனாவை இல­கு­வில் புறந்­தள்ளி விட­மு­டி­யாத நிலை­மையே உள்­ளது. தற்­போ­தைய ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் எவ்­வி­த­மான கருத்­துக்­களை முன்­வைத்­தாலும் சீனாவின் கையி­ருப்புத் தொகைக்­கான மாற்று நிதி மூலங்­களை உட­ன­டி­யாக பெற்­றுக்­கொள்­வ­தென்­பது அவரால் இல­குவில் இய­லுக்­கின்ற காரியமல்ல. அதே­போன்று சீனா சடு­தி­யாக தனது நாண­யப்­பெ­று­ம­தியை குறைக்­கு­மா­யி­ருந்­தாலும் அதனால் அமெ­ரிக்­கா­வுக்கே நெருக்­க­டி­யான பொரு­ளா­தார நிலை­மைகள் எழுந்து விடும். ஆகவே அமெ­ரிக்­கா­வுக்கு சீனா­வு­ட­னான உறவு முக்­கி­ய­மா­ன­தா­கின்­றது. 

திருத்­தங்­க­ளுடன் நகர்வு

தற்­போ­தைய நிலை­மையில் ஒவ்­வொரு நாடு­க­ளுக்கும் இறைமை தொடர்­பான உணர்­வு­களை அதி­க­மாக பிர­தி­ப­லிக்­கின்­றன. சீனாவைப் பொறுத்­த­வ­ரையில் அதற்கு போட்­டித்­தன்மை அதி­க­மாக உள்­ளது. ஆகவே தனது முத­லீட்டு தளங்­களில் ஸ்திரத்­தன்­மை­யையே அதி­க­மாக விரும்­பு­கின்­றது. இதனை மையப்­ப­டுத்தி சில விட­யங்­களை சீனா கவ­னத்தில் கொண்­டுள்­ளது. குறிப்­பாக கூறு­வ­தானால் ஆரம்­பத்தில் சீனாவின் மாநி­லங்கள் வெளிநா­டு­களுக்கு முத­லீ­டு­களை–கடன்­களை வழங்க முடியும் என்ற நிலை­மைகள் இருந்­தன. ஆனால் தற்­போது மத்­திய அர­சாங்­கத்தின் ஊடா­கவே அவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடியும் என்ற நிலை­மைகள் ஏற்­பட்­டுள்­ளன. இது சிறந்­த­வொரு விட­ய­மாகும். 

காரணம், சீனாவின் மாநி­ல­மொன்று சிறிய நாடொன்­றுக்கு கடன்­தொ­கையை வழங்­கு­கின்­றது. பின்னர் குறித்த காலப்­ப­கு­திக்குள் அதனை அந்த நாடு அத்­தொ­கையை மீளச் செலுத்த முடி­யாது போகின்­ற­போது அந்த மாநிலம் தான் வழங்­கிய கடனை மீளப்­பெ­று­வ­தற்­காக அதி­யுச்­ச­மாக எடுக்கக் கூடிய நட­வ­டிக்­கையை கையி­லெ­டுத்தால் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான இரு­த­ரப்பு உற­வு­கள்­கேள்­விக்­கு­றி­யா­கி­விடும். ஆகவே அதனை மைய­மாக வைத்து இரா­ஜ­தந்­திரக் கொள்­கை­களை மாற்­றி­ய­மைத்­துள்­ளது. 

மேலும் சீனா­வைச் சேர்ந்­த­வர்கள் பலர் இரா­ஜ­தந்­திரச் சேவை, பூகோள பொரு­ளாதார விட­யங்கள் போன்­ற­வற்றில் கற்­கை­களை நிறைவு செய்து வரு­கின்­றார்கள். மேற்­குலக நாடுகள் சீனா­வி­டமி­ருந்து கற்­றுக்­கொண்­டதை விடவும் அந்த நாடு­க­ளி­டமி­ருந்து சீனா கற்­றுக்­கொண்­டதே தற்­போ­தைய நிலையில் அதி­க­மா­க­வுள்­ளது. இந்த விட­யமும் அந்­ நாட்டின் வளர்ச்­சிக்கு முக்­கி­மா­ன­தொன்­றா­கின்­றது. 

ஒரே பட்டி- ஒரே பாதை 

சீனா­வுக்கு அந்­நிய செலா­வணி கையி­ருப்­பினை தொடர்ச்­சி­யாக திறை­சே­ரியில் வைத்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. அதே­நேரம் அதி­க­ளவு தொகையை நீண்­ட­கால முத­லீ­டு­க­ளா­கவும் மேற்­கொண்டுவிட­ முடி­யாது. ஆகவே பெருந்­திட்­ட­மொன்றில் வெவ்­வேறு வழி­களில் வெவ்­வேறு பகு­தி­களில் குறுங்­கால முத­லீ­டுக­ளாக அதா­வது 10 முதல் 15 வரு­டங்­க­ளுக்குட்­பட்­ட­தாக மேற்­கொள்­கின்­றது. இதுதான் தற்­போது சீனா­வால் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டுள்ள பொரு­ளா­தார, அர­சியல், இரா­ஜ­தந்­திர மூலோ­பாயம் எனப் பார்க்க வேண்­டி­யுள்­ளது. 

இதன் பிர­காரம் உரு­வா­னது தான் "ஒரே­பட்டி- ஒரே பாதை" திட்­ட­மாக காணப்­ப­டு­கின்­றது. இத் திட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு அறி­மு­க­ப்படுத்தப்பட்டது. இத் திட்டம் கச­கஸ்­தானில் வைத்து அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட போது விநோ­த­மான திட்டம் எனப் பலர் கடு­மை­யாக விமர்­சித்­தார்கள். இப்­போது இத் திட்டம் 67 நாடு­களை உள்­வாங்­கிக்­கொண்­ட­தாக அமை­கின்­றது. இத் திட்டம் சீனாவின் விநி­யோகத் திறனை அதி­க­ரிக்கும் ஒன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. மேலும் இத் திட்டம் நடை­மு­றைப்­ப­டு­த்தப்படுவதால் வெளிநாட்டு பல்­தே­சிய நிறு­வ­னங்கள் பலவும் சீனா­வு­ட­னான உற­வு­களை மேலும் வலுப்­ப­டுத்த முயற்­சிக்கும். அதன்மூலம் தன்னை உல­கத்­துடன் இரண்­ட­றக்­க­லந்து விட முடியும் என்­பதே சீனாவின் இத்­திட்டம் சார்ந்த நீண்­ட­கால இலக்­காக இருக்­கின்­றது. 

சீனா இத் திட்­டத்­தை முழு­மைப்­ப­டுத்­து­வ­தற்­காக ஆசிய உட்­கட்­ட­மைப்பு முத­லீட்டு வங்கி, பட்­டுப்­பாதை நிதியம், கடல்­வழி பட்­டுப்­பாதை நிதியம், மத்­திய ஆசியப் பிராந்­திய நிதியம், ஆசிய நிதியம் போன்ற பல்­வேறு நிதிக் கட்­ட­மைப்­புக்­களை உரு­வாக்கி அவற்றினூடாக செயற்­பா­டுகளை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

அம்­பாந்­தோட்­டையின் முக்­கி­யத்­துவம்

இவ்­வா­றான நிலையில் "ஒரே­ பட்­டி -­ஒ­ரே ­பாதை" திட்­டத்தில் அம்­பாந்­தோட்­டையின் முக்­கி­யத்­துவம் என்ன என்­பதை பலர் ஆழ­மாகக் கவ­னிக்கத் தவ­றி­விட்­டார்கள். அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தை சீனா ஆரம்­பத்தில் கட்­டி­யது. பின்னர் அதன் நிர்­வா­கப்­ப­ணிகள் உள்­ளிட்ட அனைத்­தையும் தன்­ன­கப்­ப­டுத்­தி­யது. இவ்­வாறு அம்­பாந்­தோட்­டையை முழு­மை­யாக தன்­ன­கப்­ப­டுத்­து­வதால் இந்து சமுத்­திரப் பிராந்­தி­யத்­திற்குள் சீனாவின் தென்­க­டற்­ப­குதி ஊடாக பிர­வே­சிப்­ப­தற்­காக வாய்ப்புக் கிடைக்­கின்­றது. 

அத்­துடன் இந்து சமுத்­திரப் பிராந்­தி­யத்திலுள்ள கேந்­திர ஸ்தானத்தில் தனது இருப்பும் உறு­தி­யா­கின்­றது. இது கடல்­வழி ரீதி­யான இணைப்பில் ஆபி­ரிக்கா உள்­ளிட்ட ஏனைய கண்­டங்­களை இணைப்­ப­தற்கும் அத­னை­ய­டுத்து செங்­கடலூடாக மேல்­நோக்கிச் செல்­வ­தற்கும் தங்கு தடை­யின்றி அமை­கின்­றது என்­பதே சீனாவின் நிலைப்­பா­டாகும். 

அதே­போன்று அம்­பாந்­தோட்­டை­யி­லி­ருந்து கீழ்ப்­பக்­க­மாகச் சென்றால் குறுந்­தூ­ரத்­தில்தான் மலாக்கா நீரிணை இருக்­கின்­றது. இந்த நீரி­ணை­யா­னது இந்­தியப் பெருங்­க­ட­லையும் பசுபிக் ­பெ­ருங்­கட­லையும் இணைப்­ப­தாவுள்­ளது. சீனா, இந்­தோ­னே­சியா, மலே­சியா, தாய்வான், ஜப்பான், தென்­கொ­ரியா, உள்­ளிட்ட நாடு­களின் கடல்­வ­ழிப் ­போக்­கு­வ­ரத்­துக்கு முக்­கி­ய­மான பகு­தி­யாகக் காணப்­ப­டு­கின்­றது.  

அம்­பாந்­தோட்­டை­யி­லி­ருந்து நேர­டி­யா­கவே மலாக்கா நீரிணையூடாக பிர­வே­சிக்க முடி­வ­தா­னது சீனா­வுக்கு காணப்­ப­டு­கின்ற பாது­காப்பு சம்­பந்­த­மான பிரச்­சி­னையை தீர்ப்­ப­தாகவுள்­ளது. காரணம், இப்­ப­கு­தியின் ஊடாக ஆண்­டொன்­றுக்கு சுமார் 94 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான கப்­பல்கள் போக்­கு­வ­ரத்தில் ஈடு­ப­டு­கின்­றன. 

முக்­கி­ய­மாக பெற்­றோ­லி­ய­ப் பொ­ருட்கள் உள்­ளிட்ட பல்­வேறு உற்­பத்­திப் ­பொ­ருட்­க­ளுடன் மலாக்கா நீரிணை ஊடான கப்­பல் ­ப­ய­ணங்கள் காணப்­ப­டு­கின்­றன. சீனாவும் தனக்­கான பெற்­றோ­லியப் பொருட்­களை அதி­க­ளவில் இப்­பா­தையினூடா­கவே பெற்­றுக்­கொள்­கின்­றது. தற்­போது அம்­பாந்­தோட்டை துறை­முகம் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­னது அந்­நாட்டின் கடல்­வழி போக்குவரத்து பாது­காப்­புக்கான ஆபத்­தை துடைத்­தெ­றி­வ­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. ஆகவே தான் சீனாவைப் பொறுத்­த­வ­ரையில் அம்­பாந்­தோட்டை துறை­முகம் என்­பது அதன் கடல்­வழிப் போக்­கு­வ­ரத்து திட்­டத்தின் ஒரு கேந்­திர ஸ்தான­மா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

இந்­தி­யா­வுக்கு பிரச்­சி­னையா?

"ஒரே ­பட்டி  ஒரே ­பாதை" திட்­டத்தின் ஊடாக இந்­தி­யாவின் தேசிய பாதுகாப்புக்கு சவால் இருக்கின்றதா என்பது தொடர்பில் பார்க்கின்றபோது இந்தியாவைத் தவிர எந்தவொரு நாடும் எதிர்ப்பினை வெளியிடவில்லை. இந்தியா கூட இறுதி நேரத்தில் தான் தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பதைக் கூட நேரடியாகச் சொல்லாது இறைமை தொடர்பில் பிரச்சினையுள்ளது என்பதை மட்டும் கூறிவிட்டு வந்துள்ளது. அதனைவிடவும் இந்தியத் தரப்பிலிருந்து வேறெந்த விடயங்களும் முன்வைக்கப்படவில்லை.

இவ்வாறு இந்தியா இறைமை தொடர்பான கூற்றை முன்வைத்த பின்னர், சீனா அதனை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு இறைமை தொடர்பில் பிரச்சினை காணப்படுமாயின் அத் திட்டத்தை மாற்று வழியில் முன்னெடுப்பதற்குக் கூட தயாராவுள்ளதாக கூறியுள்ளது. இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரையில் இறைமை என்ற காரணத்தை முன்வைத்த பின்னர் கீழிறங்கிப்போக முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 

அதேநேரம் சீனாவின் உயர் இராஜதந்திர தரப்பினர் கூட இத் திட்டத்தை மாற்றியமைக்கத் தயாராகவுள்ளோம் என்று நேரடியாகவே இந்தியத் தரப்பிடம் கூறிய பின்னர் கூட அதற்கு இந்தியத் தரப்பிடமிருந்து எவ்விதமான எதிர்வினையும் தற்போது வரையில் இல்லை. இதனால் சீனாவுக்கு இந்தியாவின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சீனாவின் இத் திட்டம் குறித்து நேர்மறையான கருத்தியலைக் கொண்டுள்ளது. 

குறிப்பாக ஆசியாவில் சீனாவின் பிரவேசத்தைக் கூட அமெரிக்க விரும்பவில்லை. ஆகவே இத் திட்டம் முன்னெடுக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று சிந்திக்கின்றது. ஆகவே ஆசிய பிராந்தியத்தில் இந்தியா மட்டுமே எதிர்க்கின்றது. அமெரிக்காவின் முகவராக இந்தியா செயற்படுவதால் தான் இவ்வாறு தடுக்க முயல்கின்றதா என்பது தான் அந்த சந்தேகமாகவுள்ளது. ஆகவே இந்தியா இத் திட்டம் சம்பந்தமாக எந்தவிதமான எதிர்வினையும் வெளிப்படுத்தாமலிருப்பது பொருத்தமற்றது. 

உலக மேலதிக சக்தி

"ஒரே பட்டி ஒரே பாதை"  திட்டமானது ஷி ஜின் பிங் தலைமையிலான அரசாங்கத்தால் பல்வேறு மூலோபாயங்களுடன் முன்னெடுக்கப்படுகின்றது. ஏனைய நாடுகளும் ஏற்றுக்கொண்டாகிவிட்டது.  ஏற்கனவே அந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு ஏற்றுமதி, வெளிநாட்டு முதலீடுகள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், அந்நியச் செலாவணி கையிருப்பு என அனைத்துமே இராஜதந்திர ரீதியான மூலோபாயத் திட்டமிடல்களுடனேயே நடைபெறுகின்றன. அவ்வாறு பார்க்கின்ற நிலையில் 2030 ஆம் ஆண்டு சீனா உலகத்தில் பொருளாதார மேலாதிக்க சக்தியாக உருவெடுக்கும் என்பது நிச்சயமாகின்றது.