(நெவில் அன்தனி)
ஜப்பானில் நடைபெற்ற 18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் கடைசி நாளான நேற்றைய தினம்(09-06-2018) ஆண்களுக்கான 4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. அத்துடன் பெண்களுக்கான 4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் இலங்கைக்கு கிடைத்தன.
இதன் பிரகாரம் ஜப்பானின் கிபு விளையாட்டரங்கில் இன்று நிறைவு பெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு மொத்தமாக 3 தங்கப் பதக்கங்களும் 4 வெள்ளிப் பதக்கங்களும் 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.

ஆண்களுக்கான 4 தர 400 மீற்ற்ர் தொடர் ஓட்டத்தை 3 நிமிடங்கள், 08.70 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை அணியில் பபசர நிக்கு, பசிந்து கொடிகார, இந்த்ரஜித், ரவிஷ்க, அருண தர்ஷன ஆகியோர் இடம்பெற்றனர். 3 நிமிடங்கள், 45.16 செக்கன்களில் 4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை பெண்கள் அணியில் இஷாரா ஆதித்யா, சச்சினி திவ்யாஞ்சலி, அமாஷா டி சில்வா, டில்ஷி ஷ்யாமலி குமாரசிங்க ஆகியோர் இடம்பெற்றனர்.

இன்றைய தினம் காலை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 24.47 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்ற அமாஷா டி சில்வா தனது அதிசிறந்த நேரப் பெறுதியைப் பதிவு செய்தார்.

சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளின்போது பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் பரமி வசன்தி மாரிஸ்டெல்லா (10 நி. 21.54 செக்.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இது அவரது தனிப்பட்ட அதி சிறந்த நேரப் பெறுதியாகும்.

இவரை விட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் டில்ஷி ஷயாமலி குமாரசிங்க (3 நி. 05.53 செக்.) வெண்கலப் பதக்கம் வென்றார். இவரும் தனது அதி சிறந்த நேரப் பெறுதியைப் பதிவு செய்தார்.