அமெரிக்க உளவுத்துறையின் இரகசிய ஆவணங்களை சீனாவுக்கு விற்றதாக கூறி அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமெரிக்க புலனாய்வு அதிகாரி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க கடல்சார் பாதுகாப்புத் தரவுகளை சீன அரசாங்கத்தின் அணுசரணையின் கீழ் இயங்கும் ஹெக்கர்களின் குழு ஒன்று திருடி விட்டதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டதையடுத்து அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட அமெரிக்க புலனாய்வு பிரிவினர், முன்னாள் அமெரிக்க புலனாய்வு (சி.ஐ.ஏ) அதிகாரியான கெவின் மெல்லோரி என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு சிறையில் தடுத்து வைத்தனர்.

கெவின் மெல்லோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சீன உளவுத் துறையில் பணிபுரியும் மைக்கெல் யங் என்பவர் அறிமுகமாகி அமெரிக்க உளவுத்துறையின் இரகசிய ஆவணங்களை தமக்கு வழங்குமாறு கெவினிடம் கடந்த ஆண்டு கோரியுள்ளார்.

மேலும் இதற்காக பல கோடி டொலர்கள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதற்கு கெவினும் ஒப்புதல் தெரிவித்து, அமெரிக்க உளவுத்துறையால் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் சில ஆவணங்களை, மைக்கெல் யங்குக்கு கெவின் அனுப்பி வைத்தார். 

இந்நிலையில், விவகாரம் எப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து கெவினிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போது, மேற்குறிப்பிட்ட தகவல்கள் குறித்து கெவின் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சொந்த நாட்டுக்கு எதிராக சதி செய்தல், இரகசிய ஆவணங்களை வெளியிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு வோஷிங்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, கெவின் பேட்ரிக் மல்லோரியை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.