மலை­யக பெருந்­தோட்­டப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்து சிறு­வர்­களை தலை­ந­க­ரங்­க­ளுக்கு பணிக்கு அமர்த்தும் செயற்­பா­டுகள் பல தசாப்­தங்­க­ளாக இடம்­பெற்று வரு­கின்­றன.

 

பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் இவ்­வாறு பணிக்கு அமர்த்­தப்­பட்ட சிறார்கள் மர்­ம­மான முறையில் மர­ணத்தைத் தழு­விய சம்­ப­வங்­க­ளையும் நாம் அடிக்­கடி  கேள்­வி­யுற்­றி­ருக்­கிறோம். 

பலர் கொடூ­ர­மான சித்­தி­ர­வ­தை­களின் பின்னர் தப்­பிப்­பி­ழைத்து வீடு திரும்­பி­யுள்­ளனர். பல சம்­ப­வங்கள் வெளி உல­குக்கு தெரி­யாது மூடி மறைக்­கப்­பட்­டுள்­ளன. அது­மாத்­தி­ர­மின்றி வெளிநா­டு­க­ளுக்கு அனுப்­பு­வ­தா­கக்­கூறி கூட்­டிச்­செல்­லப்­படும் இளம் பெண்கள் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் எனினும் அவர்கள் சமூ­கத்­திற்கு அஞ்சி அவற்றை வெளியில் கூறு­வ­தில்லை என்­பதும் முக்­கிய விடயம்.அதே வேளை   வீடு­களில் பணி புரிந்து மர்­ம­மான முறையில் மர­ணத்தைத் தழு­விய சம்­ப­வங்­க­ளுக்கு கார­ண­கர்த்­தாக்கள் சட்­டத்­தி­லி­ருந்து தப்­பியே  வாழ்­கின்­றனர் என்­ப­தையும்  மறுக்­கவோ மறைக்­கவோ முடி­யாது. 

இவ்­வாறு தலை­நகர் வீடு­க­ளுக்கு சிறு­வர்­களை பணிக்கு அமர்த்தும் செயற்­பா­டு­களின் பின்னால்  தர­கர்கள்  இயங்கி வரு­வதை அனை­வரும் அறிவர்.  ஆனால் கடந்த வாரம் தல­வாக்­கலைப் பகு­தியில் இடம்­பெற்ற சம்­ப­வத்தை நோக்கும் போது குழந்­தை­களை   விற்கும் சம்­ப­வங்­களும் நெடு­நாட்­க­ளாக பெருந்­தோட்­டப்­ப­கு­தி­களில் இடம்­பெற்று வரு­கின்­ற­னவா என்ற அச்சம் தோன்­றி­யுள்­ளது. 

தல­வாக்­கலை சம்­பவம்

தல­வாக்­கலை அக்­க­ர­பத்­தனை பொலிஸ் பிரிவின் அக்­க­ர­பத்­தனை தோட்­டத்தில் வசித்து வந்த ஜெக­தீஸ்­வரன் சசி­கலா தம்­ப­தி­யி­னரின் இரண்டு பிள்­ளைகள் வெவ்­வேறு நபர்­க­ளிடம் விற்­கப்­பட்­ட­தா­கக்­கூ­றப்­படும் சம்­பவம் மலை­ய­கத்தில் அதிர்ச்சி அலை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. ஏனெனில் இது தொடர்பில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் அர­சியல் பிர­மு­கர்­களும் அடங்­கு­கின்­றனர். தல­வாக்­கலை லிந்­துலை நகர சபைத்­த­லைவர் மற்றும் சபை உறுப்­பினர் உள்­ள­டங்­க­லாக இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டைய மேலும் இருவர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அதே வேளை இச்­சம்­ப­வத்தில் குறித்த பிள்­ளை­களின் தாயாரும் பெண் குழந்­தையை தத்­தெ­டுத்த காலி நக­ரைச்­சேர்ந்த தம்­ப­தி­யி­னரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளமை முக்­கிய விடயம். 

நடந்­தது என்ன?

இச்­சம்­பவம் பற்றி சசி­க­லாவின் கணவர் ஜெக­தீஸ்­வரன் கேச­ரிக்கு கூறு­கையில், நான் அக்­க­ர­பத்­தனை பிர­தே­சத்தை சேர்ந்­தவன். எனது நண்பன் ஒரு­வரை சந்­திக்க பிலி­யந்­தல செல்லும் போது அங்கு எஸ்.ஓ.எஸ் கிரா­மத்தில் (பெற்­றோரை இழந்­த­வர்­களின் காப்­பகம்)  வசித்து வந்த சசி­கலா அறி­மு­க­மானார். அவ­ரது தாயார் இறந்த பிறகு அவர் குறித்த இடத்­தி­லேயே வசித்து வந்தார். இவ­ரது அறி­முகம் காத­லாக மலர்ந்து நாம் திரு­மணம் செய்து கொண்டோம். அப்­போது அவ­ருக்கு வயது 19 ஆகும். அவர் என்­னுடன் வாழ்க்­கையை ஆரம்­பித்தார். எமக்கு ஒரு பெண் குழந்­தையும், ஆண் குழந்­தை­யு­மாக இருவர் பிறந்­தனர். பெண் குழந்­தைக்கு 05 வயது. ஆண் குழந்­தைக்கு இரண்­டரை வய­தாக இருக்கும் போது கடந்த வருடம் 2017 ஜுன் மாதம்  எனது மனைவி மற்றும் குழந்­தைகள் திடீ­ரென மாய­மாகி விட்­டனர். ஒன்றும் புரி­யாத நான் இது குறித்து அக்­க­ர­பத்­தனை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு ஒன்றை செய்தேன். மனை­வியின் கைய­டக்­கத்­தொ­லை­பே­சியும் இயங்­க­வில்லை. எனது பணி­யையும் விட்டு எனது மனைவி பிள்­ளை­களை தேடி அலைந்தேன். பின்பு இது குறித்து நுவ­ரெ­லியா பொலிஸ் தலைமை காரி­யா­ல­யத்­திலும் முறைப்­பா­டொன்றை செய்தேன். சுமார் மூன்று மாதங்கள் கழித்து எனது மகன் பத்தனை பிர­தே­சத்தின் ஒரு பௌத்த விகா­ரையில் இருப்­ப­தாக  தகவல்   பொலி­ஸா­ருக்­குக்­கி­டைத்­தது. அதன் படி அவர்கள் மகனை மீட்­டுத்­தந்­தனர். அதன் பிறகு மனைவி மற்றும் மக­ளைப்­பற்­றிய தக­வல்கள் எனக்­குக்­கி­டைக்­க­வில்லை இப்­ப­டியே ஒரு வருடம் கழிந்­தது. கடந்த மே மாதம் 23 ஆம் திகதி எனது மனைவி இருந்த எஸ்.ஓ.எஸ் கிரா­மத்­தி­லி­ருந்து எனக்கு ஒரு தொலை­பேசி அழைப்பு வந்­தது. அதில் எனது மனைவி தற்­ச­மயம் அங்கு தங்­கி­யி­ருப்­ப­தா­கவும் வந்து அழைத்­துச்­செல்­லு­மாறும் கூறினர். நான் உட­ன­டி­யாக அங்கு சென்று மனை­வியை அழைத்து வந்து இது குறித்து அக்­க­ர­பத்­தனை மற்றும் நுவ­ரெ­லியா பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு  அறி­வித்தேன். பின்னர் அவர்கள் மனை­வி­யிடம் மேற்­கொண்ட விசா­ர­ணைகள் மூலம் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் மனைவி மற்றும் எனது இரண்டு பிள்­ளைகள் காணாமல் போன விவ­கா­ரத்­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்­தனர்.  மனை­விக்கும் பிள்­ளைகள் இரு­வ­ருக்கும் என்ன நடந்­தது என்ற விபரம் எனக்குப் பின்­னரே தெரி­ய­வந்­தது. 

வேலை பெற்­றுத்­த­ரு­வ­தாகக் கூறி மோசடி

அக்­க­ர­பத்­த­னைப்­ப­கு­தி­யைச்­சேர்ந்த தெரிந்த நபர் ஒரு­வரே  மனை­விக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்­பைப்­பெற்­றுத்­த­ரு­வ­தாக ஆசை காட்டி அவரை ஓரி­டத்­திற்கு அழைத்­தி­ருக்­கிறார். வெளிநாட்­டுக்கு அனுப்பி வைப்­ப­தா­கவும் பிள்­ளை­களை தான் பரா­ம­ரிப்­ப­தா­கவும் அவர் தெரி­விக்­கவே மனை­வியும் அதற்கு சம்­ம­தித்­துள்ளார். 

மூன்று நாட்கள் வரை அவ­ரது உற­வினர் ஒரு­வரின் வீட்டில் மனை­வியும் பிள்­ளை­களும் தங்­கி­யுள்­ளனர். அதற்­குப்­பி­றகே நக­ர­சபை தலை­வரின் வீட்­டிற்கு அழைத்­துச்­செல்­லப்­பட்­டுள்­ளனர். அங்கு மகளை அழைத்­துச்­செல்ல ஒரு ஆணும் பெண்ணும் வந்­துள்­ளனர். அவர்கள் காலியை சேர்ந்­த­வர்கள் என்று கூறி “எனது சம்­ம­தத்­து­ட­னேயே பிள்­ளையை அனுப்­பு­கிறேன்”  என்று கடிதம் எழுதி வாங்­கிக்­கொண்டு மகளை அனுப்­பி­யுள்­ளனர். மேலும் இரண்­டரை வயது மகனை போகா­வத்த பகுதி விகா­ரைக்கு அழைத்துச் சென்­றுள்­ளனர். அதன் பின்னர் மனை­வியை தலை­ந­க­ருக்கு அழைத்­துச்­சென்று அங்கு ஒரு வீட்டில் வேலைக்கு அமர்த்­தி­யுள்­ளனர். வெளி நாட்­டுக்கு செல்லும் ஆசையில் அங்கு சென்ற எனது மனை­விக்கு இரண்டு பிள்­ளை­களை பிரிந்த  அதே நேரம் அவ­ருக்கும்  ஏமாற்­றமே மிஞ்­சி­யது.

 நுவ­ரெ­லியா பொலிஸ் தலைமை காரி­யா­ல­யத்தின்  பொலிஸ் மற்றும் சி.ஐ.டியி­னரின் முயற்­சிகள் எனது சட்­டத்­த­ரணி கொடுத்த அழுத்­தங்கள் கார­ண­மாக எனது மனைவி பிள்­ளை­களை நான் கண்டு பிடித்­து­விட்டேன் ஆனால்  அவர்­க­ளோடு மீண்டும் இணைந்து வாழ்­வ­தற்­கு­ரிய வழி­வ­கை­களை உரியவர்கள்  எனக்கு ஏற்­ப­டுத்தி தர வேண்டும் என கண்ணீர் மல்க தனது கதை­யைக்­கூ­றினார்  ஜெக­தீஸ்­வரன்.   

விசா­ர­ணைகள் தாம­த­ம­டைந்­த­தற்கு என்ன காரணம்?

கடந்த வருடம் ஜுன் மாதம் தனது மனைவி பிள்­ளை­களை காண­வில்லை என தான் முறைப்­பாடு செய்­தி­ருந்தும் ஆகஸ்ட் மாத­ம­ள­வி­லேயே போகா­வத்த   விகா­ரையின் விகா­ரா­தி­பதி மகனை அக்­க­ர­பத்­தனை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்தார் என ஜெக­தீஸ்­வரன் குறிப்­பி­டு­கிறார். 

அந்த சந்­தர்ப்­பத்தில் பொலிஸார்  இந்த குழந்தை எங்­ஙனம் யார் மூல­மாக விகா­ரைக்கு கொண்டு வரப்­பட்­டது என்ற விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்­தி­யி­ருந்தால் தனது மனை­வி­யையும் பெண் குழந்­தை­யையும் அப்­போதே மீட்­டி­ருக்­கலாம் என்று கூறு­கிறார் ஜெக­தீஸ்­வரன்.  ஆனால் குறித்த சம்­ப­வத்­திற்­குப்­பி­றகு தாம் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் அடிப்­ப­டை­யி­லேயே இக்­கை­துகள் இடம்­பெற்­றன என்­கின்­றது பொலிஸ் தரப்பு  இதற்கு ஒரு வருட காலம் எடுத்­துக்­கொண்­டதா என்ற கேள்­வியும் எழு­கி­றது.  ஆனால் இவ்­வா­றான சம்­ப­வங்கள் குறித்து விசா­ர­ணைகள் செய்து சரி­யான தக­வல்­களை உறு­திப்­ப­டுத்­திய பின்­னரே கைது­களை மேற்­கொள்ள முடியும் என்றும் பொலிஸ் தரப்பு தனது பக்க நியா­யத்தை முன்­வைக்­கின்­றது.

ஆனால்  குறித்த விகா­ரா­தி­ப­திக்கு எதி­ராக  அந்தச் சந்­தர்ப்­பத்தில்  விசா­ர­ணை­களும் சட்ட நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எனினும் தற்­போது இந்த விவ­காரம் சம்­பந்­த­மாக தொடர்பு பட்ட சக­லரும் விசா­ர­ணை­க­ளுக்கு  முகங்­கொ­டுத்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என்­பது முக்­கிய விடயம்.

சட்­ட­ரீ­தி­யான அணு­கு­மு­றை­களை அறிய வேண்டும்

தல­வாக்­கலை சம்­ப­வத்தின் பிர­தான சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­ட­தற்கு மூல காரணம் பிள்ளை ஒன்றை தத்­தெ­டுத்தல் அல்­லது தத்து கொடுத்தல் தொடர்­பான சட்ட அணு­கு­மு­றை­களை குறித்த நபர்கள் அறி­யா­தி­ருந்­த­மை­யாகும். இலங்­கையில்  தத்­தெ­டுத்தல் தொடர்­பான சட்ட ஏற்­பா­டுகள்  மக­வேற்பு செய்தல் பிரி­வுக்குள் அடங்­கு­கி­றது. இந்த மக­வேற்பை ஏன் சட்­ட­ரீ­தி­யாக செய்ய வேண்­டு­மென்றால் பல சந்­தர்ப்­பங்­களில் மக­வேற்பு செய்­யப்­பட்ட  பிள்­ளை­களின் உரி­மைகள் இழக்­கப்­படும் போது அவற்றை மீண்டும் பெற்­றுக்­கொ­டுக்க இந்த சட்­டமே உத­வு­கி­றது. தத்­தெ­டுத்­த­வர்கள் சில நேரங்­களில் அப்­பிள்­ளை­களை கைவிட்டால் அவர்கள் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­படல், வெளிநாட்­டுக்கு விற்­கப்­படல் , ஊழியம் சுரண்டல் போன்­ற­வற்­றிற்கு முகங்­கொ­டுத்தால். இவை கார­ண­மா­கவே சட்ட ஏற்­பா­டுகள் தேவைப்­ப­டு­கின்­றன. இலங்­கையில் ஒரு பிள்­ளையை தத்­தெ­டுக்க விரும்பும் ஒருவர் தான் வசிக்கும் பிர­தேச  நீதி­மன்­றத்தில் சட்ட ரீதி­யாக  விண்­ணப்பம் ஒன்றை மேற்­கொள்ளல் அவ­சியம். அதன் படி 14 வய­துக்­குட்­பட்ட பிள்­ளையை தத்­தெ­டுக்­கலாம். இதில் 10 வய­துக்கு மேற்­பட்ட அதே வேளை 14 வய­துக்­குட்­பட்ட பிள்­ளைகள் என்றால் அவர்­களின் சம்­மதம் அவ­சியம். 

தத்­தெ­டுக்க விரும்பும் தம்­ப­தி­யினர் ஆண் அல்­லது பெண் 25 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். அதே வேளை தத்­தெ­டுக்கும் பிள்­ளைக்கும் வளர்ப்­புப்­பெற்­றோ­ருக்­கு­மி­டை­யி­லான வயது வித்­தி­யாசம் 21 வரு­டங்­க­ளுக்கு குறை­வாக இருக்­கக்­கூ­டாது ஏனெனில் பிள்­ளைக்கும் தத்­தெ­டுப்­ப­வர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவு பெற்றோர்- பிள்ளை என்­றி­ருத்தல் அவ­சியம்.   

இவ்­வாறு பல சட்ட ஏற்­பா­டுகள் இதில் அடங்­கி­யுள்­ளன. நீதி­மன்ற முன் அனு­ம­தி­யின்றி பிள்ளை ஒன்றை சட்­ட­வி­ரோ­த­மாக வழங்­கி­யி­ருந்தால் அல்­லது பணம் பெற்­றுக்­கொண்டு பிள்­ளையை விற்­றி­ருந்தால் அது ஒரு குற்­ற­மாகும். குற்றம் நிரூ­பிக்­கப்­ப­டு­மி­டத்து தண்­டப்­ப­ணத்­துடன் இரண்டு வரு­டங்­க­ளுக்கு குறை­யாத சிறைத்­தண்­டனை வழங்கப்படலாம்.

முறைப்பாடுகள் பற்றிய அக்கறை அவசியம்

குடும்பங்களில் நிலவும் முரண்பாடுகள் காரணமாக கணவனோ அல்லது மனைவியோ பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறுதல் பற்றிய சம்பவங்கள் அதிகமாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளாக செய்யப்படுவதில்லை. இதன் காரணமாகவே பிள்ளைகள் பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்படுகின்றனர். ஏனையோர் தமக்கு சாதகமாக இவற்றை பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆகவே இவ்வாறான சம்பவங்கள் பற்றி ஒவ்வொருவரும் அக்கறை கொள்தல் அவசியம். 

இவ்வகையான முறைப்பாடுகள் பற்றி துரித விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பாகும். அவ்வாறு இடம்பெறுமாயின்  அப்பாவி சிறார்கள்   ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றப்படுவர். 

எனினும் அக்கரபத்தனை சம்பவத்தில் எந்த இடையூறும் இல்லாது இன்று பாதுகாப்பாக இருக்கும் சதூர்ஷனா மற்றும் அவரின் தம்பி வினோத் இருவரும் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டியுள்ளது. சட்ட விரோதமாக பிள்ளைகளை தத்துக்கொடுத்தல் சம்பவங்களில் ஈடுபடும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இச்சம்பவம் ஒரு பாடமாகும். சட்டம் தனது கடமையை செய்யட்டும்.