உலகப் பொருளாதாரத்தில் அதிக பங்களிப்பை வழங்கி வரும் நாடுகளின் G7 மாநாடு இவ் வருடம் கனடாவின் கியூபெக் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

43 ஆவது தடவையாக இடம்பெறும் இம் மாநாட்டில் கனடா, பிரித்தானியா, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜேர்மனி  ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பும் கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்தார். 

மாநாட்டின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ட்ரம்ப், 

G7 மாநாட்டிற்கு கட்டாயம் ரஷ்யாவையும் அழைக்க வேண்டும் என்று தெரிவித்ததுடன், ரஷ்யா ஜனாதிபதியை ஏன் அழைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு வருகை தந்த உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள்  அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்ததாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.

உருக்கு, அலுமினியம், இரும்பு ஆகியவற்றின் இறக்குமதி தீர்வை அதிகரிப்பு, காலநிலை ஒப்பந்தம், ட்ரம்ப் மற்றும் கிம்யொங் உடனான சந்திப்பு ஆகியன முக்கியத்துவம் பெறவுள்ள இந்த சந்திப்பில் ட்ரம்பின் மேற்படி கருத்து அங்கு இருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

G8 மாநாட்டில் ரஷ்யாவும் அங்கத்துவம் வகித்திருந்தது. எனினும் ரஷ்யா கிரிமியாவை ஆக்கிரமித்ததால் 2014 ஆம் ஆண்டிலிருந்து அதன் உறுப்புரிமை நீக்கப்பட்டு G8 மாநாடு G7 மாநாடாக தோறறம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.