மத்தல விமானநிலையத்திற்கு சேவையை மேற்கொண்டிருந்த ஒரேயொரு விமானமும் தனது சேவையினை நிறுத்தியதை தொடர்ந்து விமானங்கள் எதுவும் பயணிக்காத உலகின் இரண்டாவது சர்வதேச விமானநிலையமாக மத்தல மாறியுள்ளது. 

இதுவரை மத்தல விமானநிலையத்திற்கான சேவையில் ஈடுபட்டிருந்த துபாயின் பிளைதுபாய் விமானம் தனது;சேவையை நிறுத்திக்கொள்ளும் அறிவிப்பை தீடீர் என வெளியிட்டுள்ளதுடன்,பயணிகளிற்கு கட்டணத்தை மீள வழங்கவும் முன்வந்துள்ளது.

முன்னைய அரசாங்கம் வழங்கிய சலுகைகளை தொடர்ந்து பிளைதுபாய் மற்றும் எயர் அராபிய  நிறுவனங்கள் மத்தலவிற்கான சேவையில் ஈடுபட்டன.

எனினும் ஆறுவாரத்தில் எயர் அராபிய தனது சேவையை நிறுத்திக்கொண்டது.

இதன் பின்னர் 2015 இல் ஸ்ரீலங்கன் எயர்லைன்சும் தனது சேவைiயை நிறுத்திக்கொண்டது.மத்தலையிற்கான தனது  சேவை காரணமாக வருடாந்தம் 18 மில்லியன் டொலர்களை இழப்பதாக ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் தெரிவித்திருந்தது.

210 மில்லியன் டொலர் செலவில் உருவாகிய இந்த விமானநிலையம் அமைந்துள்ள இடமும் பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றது.

முதலாவது ஸ்ரீலங்கன் எயர்பஸ் தனது  பரீட்சார்த்த ஓட்டத்தினை மேற்கொண்டிருந்த வேளை பறவை அதனுடன் மோதியதில் பாதிப்பை எதிர்கொண்டது.

இதேபோன்று விமான இயந்திரத்திற்குள் மயில்கள் சிக்கிக்கொண்டதன் காரணமாக இரு விமானங்கள் பறக்க முடியாத நெருக்கடியை சந்தித்ததும் இந்த விமானநிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இதேபோன்று வேறு பலவிமானங்களும் பறவைகளால் பாதிப்பை சந்தித்தன.

2016 மார்ச் மாதம் விமானஓடுபாதைக்குள் காட்டுவிலங்குகள் புகுந்ததை தொடர்ந்து அவற்றை அப்புறப்படுத்துவதற்கு படையினரை பயன்படுத்திய வேண்டிய நிலை உருவானது.

எனினும் கொழும்பை நோக்கி பயணிக்கும் விமானங்களை அவசரமாக வேறு பகுதிக்கு திருப்பி அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த விமானங்களை மத்தலையை நோக்கியே அதிகாரிகள் அனுப்புகின்றனர்.

மத்தல விமானநிலையத்தை வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு குத்தகைக்கு வழங்கும்  அரசாங்கத்தின் முயற்சியும் வெற்றிபெறவில்லை.