அமெரிக்க வடகொரிய ஜனாதிபதிகள் யூன் 12 ம் திகதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை மேற்கொள்ளவுள்ள சென்டொசா தீவு அழகான கடற்கரைகளையும்,கசினோக்களையும், உலகின் தலைசிறந்த கோல்வ்திடல்களையும் கொண்டுள்ளது.

இந்த தீவில் அமைந்துள்ள 112 அறைகளை கொண்ட கப்பெலா ஹோட்டலில் அமெரிக்க வடகொரிய தலைவர்கள் சந்திக்கவுள்ளனர்.

வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சரா சான்டெர்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களும் 12 ம் திகதி கப்பெலா ஹோட்டலில் சந்திப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக நாங்கள் எங்கள் சிங்கப்பூர்  நண்பர்களிற்கு நன்றி தெரிவிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

12 ம் திகதி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட ஹோட்டலிற்கு கடந்த வாரம் அமெரிக்க வடகொரிய பிரதிநிதிகள் விஜயம் மேற்கொண்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த தீவின் கடந்த காலம் என்பது பயங்கரமானது.

19ம் நூற்றாண்டில் சிங்கப்பூர் பிரிட்டிஸ் ஆட்சியாளர்களின் வர்த்தக நடவடிக்கைகளிற்கான தளமாக இத்தீவு விளங்கியது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான கடற்பாதையில் சிங்கப்பூர் அமைந்திருந்ததே இதற்கு காரணம்.

எனினும் பிரிட்டிஸ் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதற்கு முன்னரே சிங்கப்பூரில் வர்த்தக நடவடிக்கைகள் செழிப்படைந்து காணப்பட்டன.வர்த்தகர்களும் வியாபாரிகளும் கடற்கொள்ளையர்களும் இந்த பகுதிக்கு அடிக்கடி செல்வது வழமை.

அக்கால பகுதியில் சென்டொசா, புலாவு பிளகாங் மட்டி என அழைக்கப்பட்டது- மலாய் மொழியில் அதன் பொருள் மரணத்திற்கான தீவு என்பதாகும்.

வன்முறை மிகுந்த கடற்கொள்ளையர்களின் நடவடிக்கைகள் அப்பகுதியி;ல் காணப்படுவதையே அந்த பெயர் குறித்து நின்றது.

1942 ம் ஆண்டு பிரிட்டிஸ் படையினர் சரணடைந்ததை தொடர்ந்து சிங்கப்பூர் ஜப்பானின் பிடியில் சிக்கியது.

1942 ம் ஆண்டு ஜப்பானிய படையினரிடம் சரணடைந்த பிரிட்டிஸ் மற்றும் அவுஸ்திரேலிய படையினரை தடுத்துவைப்பதற்கு இந்த தீவை ஜப்பான் பயன்படுத்தியது.

ஜப்பான் இந்த தீவிற்கு சயோனான் என்ற புதிய பெயரையும் சூட்டியது- தென்பகுதியின் வெளிச்சம் என்பது இதன் பொருள்.

அடுத்த சில வருடங்களில் இந்த தீவில் ஆயிரக்கணக்கானவர்கள் ஜப்பானிய படையினரால் கொல்லப்பட்டனர்.

ஜப்பானிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட  சிங்கப்பூரின் சீனா பிரஜைகள் பலர் இந்த தீவிலேயே கொலை செய்யப்பட்டனர்.

18 முதல் 50 வயதான ஆண்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அழைக்கப்பட்டு துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.

அதன் பின்னர் அவர்களின் உடல்கள் கடலுக்குள் வீசப்பட்டன.

1972 ம் ஆண்டு சுற்றுலாப்பகுதியாக 

இந்த தீவை மாற்ற  எண்ணிய சிங்கப்பூர் அரசாங்கம்  புதிய பெயரை சூட்டியது.

ஜப்பான் சரணடைந்து ஏழு தசாப்தத்தின் பின்னர் சென்டெசா தீவு சுற்றுலாப்யணிகள் மத்தியில் பிரபலமானதாக காணப்படுகின்றது.அவர்கள் பெருமளவில் இந்த தீவிற்கு வருகின்றனர்.

சிங்கப்பூரின் பிரபலமான யூனிவேர்சல். ஸ்டுடியோ இந்த தீவிலேயே அமைந்துள்ளது.

சிங்கப்பூருடன் இந்த தீவிற்கான தொடர்பாக ஓரேயொரு பாலம் மாத்திரம் காணப்படுகின்றது, அந்த பாலத்தை பயன்படுத்தியே போக்குவரத்தை மேற்கொள்ள முடியும்.

சென்டொசாவில் உச்சிமாநாட்டை நடத்துவது என்ற தீர்மானம் அர்த்தமுள்ளதாக காணப்படுகின்றது.

சிங்கப்பூரின் மையப்பகுதியிலிருந்து தென்கரையோரத்தில் அமைந்துள்ள இந்த தீவு இரு தலைவர்களினதும் சந்திப்பிற்கு அவசியமான தனிமையை வழங்குகின்றது.

இந்த தீவை பாதுகாப்பது இலகுவான விடயமாகவுள்ளமை இன்னொரு முக்கிய விடயம்.

குறிப்பிட்ட பாலத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பை உறுதிசெய்யலாம் என்பதை கருத்தில் கொண்டே அமெரிக்க இராஜதந்திரிகள் சென்டோசா தீவை உச்சி மாநாட்டிற்காக தெரிவு செய்தனர்.

உச்சிமாநாடு நடைபெறும் தினத்தன்று குறிப்பிட்ட பகுதியை விசேட பாதுகாப்பு வலயமாக சிங்கப்பூர் அதிகாரிகள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

உச்சி மாநாடு நடைபெறும் தினத்தில் அந்த பகுதியில் ஆயுதங்கள், ஒலிபெருக்கிகள், பதாகைகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கபபூர் அரசாங்கம் தனது வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.