(நா.தனுஜா)

மனித உரிமைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் தென் கொரியா மற்றும் இலங்கை என்பன ஒன்றிணைந்து செயற்படுவதற்கு உடன்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் மற்றும் கொரிய வெளிவிவகார பிரதி அமைச்சர் லிம் சங் நம் ஆகியோருக்கிடையிலேயே கொழும்பில் இடம்பெற்ற இருதரப்பு அரசியல் தொடர்புகள் தொடர்பான இரண்டாவது கலந்துரையாடலின் போதே மேற்படி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையிலான அரசியல் ரீதியான முதலாவது கலந்துரையாடல் 2013 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற தற்போதைய கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய தொடர்பினை மேலும் வலுப்படுத்துதல் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன. 

மேலும் வர்த்தகம், முதலீடு, விவசாயம், மீன்பிடி, விஞ்ஞான தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற பரந்தளவிலான துறைகளில் இருதரப்பும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு தென் கொரிய அரசாங்கத்தின் நிதியுதவி மற்றும் ஒத்துழைப்புடன் ஹோமாகமவில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொழில்நுட்ப நகரத்திட்டம், கம்பஹாவில் தொழில்நுட்ப கல்லூரி விரிவாக்கம் மற்றும் பல்வேறு நீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பாகவும், அவற்றின் தற்போதைய நிலை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் இருநாடுகளும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான இருதரப்பு நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் ஆடை உற்பத்தி துறையில் தென் கொரியா மற்றும் இலங்கை என்பன ஒருமித்து செயற்படுவது பற்றிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. சுகாதாரம், சுற்றாடல், நிலைபேறான அபிவிருத்தி, காலநிலை மாற்றங்கள், மனித உரிமைகள் தொடர்பில் பின்பற்;றப்பட வேண்டிய சர்வதேச நியமங்களை பேணுதல் தொடர்பில் இருநாடுகளும் இணைந்து செயற்படுவதற்கு இணங்கியுள்ளன. 

இந் நிலையில் இலங்கை மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைச்சாதிடப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான இருதரப்பு சந்திப்பு இவ்வாண்டு எதிர் வரும் 28 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.