(எம்.சி.நஜிமுதீன்)

ஊடகவியலாளர் கீத்நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேவையான சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்கு தான் தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கீத்நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்திகொள்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது. 

இவ்வாறான நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் காலத்துக்கு காலம் இவ்வாறான பழிவாங்கல் மற்றும் நெருக்கடிகளை எம்மீது ஏற்படுத்தி வருகிறது. ஊடகவியலாளர் கீத்நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தற்போது என்னிடம் வாக்குமூலம் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர்.

நாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாததனால் இவ்வாறான விசாரணைகளுக்கு அஞ்சப் போவதில்லை. எனவே அச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் தேவையான நேரத்தில் வாக்கு மூலம் வழங்குவதற்குத் தயாராகவுள்ளேன் என்றார்.