(நா.தனுஜா)

மத்திய கிழக்கு நாடுகளில் பிரதானமாக கட்டார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு நல்லுறவானது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என கட்டார் டோஹா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆர்.சிவராமன் தெரிவித்துள்ளார்.

கட்டார் டோஹா வங்கியின் புதிய கிளையினை உலக வர்த்தக மையத்தில் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

டோஹா வங்கி மத்தியகிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இலங்கையில் நிறுவப்படும் முதலாவது வங்கியாகும். இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையே நல்லுறவை மேலும் மேம்படுத்துவதுடன், முதலீடுகளை அதிகரிப்பதனை நோக்காகக் கொண்டு செயற்படவுள்ளோம். அதேபோல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். 

இலங்கையில் திறந்த, வாய்ப்புள்ள சந்தையமைப்பு காணப்படுகின்றது. அதேபோல் இலங்கையின் பொருட்களுக்கு கட்டாரில் பாரிய வாய்ப்பு உள்ளது. கட்டாரின் புதிய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதுடன், இலங்கை முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புக்களையும் விரிவுபடுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

கட்டாரில் விவசாயம், சுற்றுலா, விமானத்துறை, உணவுப் பாதுகாப்பு போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு பெருமளவு உள்ளது. அதேபோல் போக்குவரத்து, சக்திவளப் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு போன்ற துறைகள் தொடர்பிலும் கட்டார் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. இலங்கையின் வர்த்தக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் பூகோளமயமாக்கப்பட்ட வர்த்தக வலையமைப்பை உருவாக்கவுள்ளோம். 

எனவே ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவினை வலுப்படுத்திக்கொள்வது அவசியமாகும் என்றார்.