எமது நாட்டின் அபிவிருத்தியில் முன்னணியில் உள்ள மேல் மாகாண பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பொறுப்பேற்கவுள்ள பாக்கியம் பெற்ற உங்களுடன் இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.  

ஆசிரியர் தொழில் உலகில் உள்ள உன்னதமான தொழிலாகும். முன்பு அரசர்கள் காலத்தில் அரச குமாரர்கள் கல்வியை பெற்றுக்கொண்ட முறை பற்றி நீங்கள் அறிவீர்கள்.

இன்று நாளுக்கு நாள் மாறிவரும் தொழில்நுட்ப உலகில் மாணவர்கள் ஆசிரியரைப் பார்க்கிலும் முன்னிற்கின்ற ஒரு யுகத்திலேயே நீங்கள் இந்த தொழிலைப் பெற்றுக்கொள்கின்றீர்கள். உங்கள் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

எனவே இந்த தொழிலிலுள்ள முக்கியத்துவத்தையும் பொறுப்பையும் நீங்கள் அறிவீர்கள். நாட்டின் எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது. கல்வியை முதலீடாகக்கொண்ட தேசம் தான் மிகச் சிறந்து விளங்கும்.

அறிவை அடிப்படையாகக்கொண்ட சமூகம் தான் நாட்டை முன்னேற்றுவதற்கு தேவையாகும். சமூகத்தை புரிந்துகொள்ளவும் மக்களை புரிந்துகொள்ளவும் பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளவும் தேவைப்படுவது கல்வியாகும்.

எனவே உங்களுடைய சேவை ஒரு புறத்தில் சேவையும் மற்றொரு புறத்தில் தொழிலுமாகும். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நீங்கள் பொறுப்பேற்றிருப்பது நாட்டையும் நாட்டின் எதிர்காலத்தையுமாகும். 

வகுப்பறைக்குச் செல்லும் ஆசிரியருக்கு இன்றைய பிள்ளைகள் சவாலாக உள்ளனர். ஏனென்றால் அவர்கள் வகுப்பறைக்கு வெளியில் நவீன தொழில்நுட்பத்தினூடாக அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். எனவே வகுப்பறைக்குச் செல்லும் நீங்கள் எப்போதும் எந்த சவாலுக்கும் முகம் கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும். 

இங்கு உரையாற்றிய கல்வி அமைச்சின் செயலாளர் மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்கள் பற்றி குறிப்பிட்டார்.

அதேபோன்று அதன் பின்னணி பற்றியும் குறிப்பிட்டார். மேல் மாகாணத்தில் மட்டும் பிரசவ விடுமுறை காரணமாக 1500 ஆசிரியைகள் நாளொன்றுக்கு வகுப்பறைக்கு சமூகமளிப்பதில்லை. இருக்கின்ற ஆசிரியர்களில் 400க்கு மேற்பட்டவர்கள் வகுப்பறைகளில் இல்லை. 

கடந்த மாதம் பிங்கிரிய கல்விக்கல்லூரியின் நிகழ்வொன்றில் நான் உரையாற்றியபோது சுமார் இரண்டரை இலட்சம் பேர் இலங்கையில் ஆசிரியர் சேவையில் உள்ளனர்.

எனினும் கல்வி திணைக்களத்தின் ஆய்வுகளின்படி நூற்றுக்கு எட்டு வீதமானவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு பொறுத்தமற்றவர்கள் என்ற விடயத்தை குறிப்பிட்டேன்.

இது பிள்ளைகளின் கல்விக்கு சவாலாகும். கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டதற்கு ஏற்ப மேல் மாகாணத்தின் நிலைமை இதுவென்றால் ஏனைய மாகாணங்களின் நிலைமை எவ்வாறிருக்கும்.

அப்படியென்றால் அரசாங்கம் இலவசக் கல்விக்காக மேற்கொள்கின்ற பெருந்தொகையான நிதி மற்றும் வளங்கள் அரச கொள்கையில் இலவசக் கல்வியை பலப்படுத்துதல் ஆகிய விடயங்களை கவனத்திற் கொள்கின்றபோது,

இந்த சேவையில் உள்ள பிரச்சினையான நிலைமையை தீர்ப்பதற்கு அரசாங்கமும் மாகாண சபைகள், கல்வி அமைச்சின் அனைத்து நிறுவனங்களும் இணைந்து விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியமென நான் கருதுகிறேன். இல்லையென்றால் இது எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக மாறும். 

இங்கு நியமனம் வழங்கப்படுகின்றவர்களின் பெயர்கள் மற்றும் பாடங்கள் குறித்து நான் பார்த்தேன். எமது நாட்டில் குறிப்பாக தமிழ் முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை அதிகரித்து காணப்படுகின்றது.

மேல் மாகாணத்தில் ஆசிரியர் சேவையில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக்கொண்டால் ஒரு நாடு என்ற வகையில் நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

இந்த நிலைமை ஏற்பட்டிருப்பது இன்று நேற்றிலிருந்து அல்ல. இது நீண்டகாலமாக நிலவிவரும் நிலைமையாகும். கல்வித்துறையில் மட்டுமன்றி ஏனைய சேவைகளிலும் உள்ள பிரச்சினை கல்விமான்கள் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்வதாகும்.

வேறு எந்த நாட்டிலும் இல்லாத சுதந்திரம் எமது நாட்டில் உள்ளது. இலங்கையில் கல்விகற்று எந்தவொருவருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும். ஆனால் வேறு சில நாடுகளில் அப்படிச் செய்ய முடியாது.

அதற்கு சட்டத்திலேயே ஏற்பாடுகள் உள்ளன. வைத்தியர்கள், பொறியியலாளர்கள் நாட்டுக்கு தேவையானவர்களை பார்க்கிலும் அதிகம் பேர் இருந்தால் அதிகமாக உள்ளவர்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றது. ஏனையவர்கள் செல்ல முடியாது என்றாலும் எமது நாட்டில் இதற்கு கட்டுப்பாடுகள் கிடையாது. விரும்பியவர்கள் சுதந்திரமாக வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். 

குறித்த காரணமாக துறைசார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப சேவைகளின் அபிவிருத்திக்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு சட்டங்களை ஆக்க முற்படுகின்றபோது அவற்றை அரசியல் பிரச்சினையாக பார்க்கிறார்கள், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகிறார்கள்.

பொறியியலாளர்கள், வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் கட்டுப்பாடுகளை விதிக்கின்றபோது பல்கலைக்கழக மாணவர்களையும் வீதியில் இறக்கிவிட முயற்சிக்கிறார்கள். என்றாலும்  ஒரு நாடு என்ற வகையில் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்காமல் அரசியல் நலன்களைப்பற்றி மட்டுமே சிந்திக்காமல் நாட்டை கட்டியெழுப்புவது பற்றியும் அனைவரும் சிந்திக்க வேண்டும். 

இன்று ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொள்கின்றவர்கள் மாணவர்களை புரிந்து கொள்வதைப்போன்று கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் விளங்கிக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

நீங்கள் மாணவர்களை பொறுப்பேற்கின்றீர்கள் என்றால் தேசத்தின் எதிர்காலத்தை பொறுப்பேற்றுக்கொள்கின்றீர்கள் என்பதே அர்த்தமாகும்.

ஆசிரியர் தொழில் உன்னதமான தொழிலாகும். இதன் மூலம் நீங்கள் பிள்ளைகளையும் கல்வித்துறையையும் நாட்டில் உள்ள ஏனைய பிரச்சினைகளையும் விளங்கிக்கொண்டு உங்களது அறிவின் மூலம் நாட்டுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் இந்த உன்னத பொறுப்பை நிறைவேற்றுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளார்.