மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த கல்விமான்களும் புத்திஜீவிகளும் நாட்டை விட்டுச்செல்வது இன்று பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் சட்டதிட்டங்கைள விதித்து நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை ஏற்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை எனினும் இலவசக் கல்வியை பெற்ற குடிமக்கள் என்ற வகையில் மனச்சாட்சியின்படி தாய்நாட்டுக்கான தமது கடமைகளை நிறைவேற்ற  அர்ப்பணிப்புடையவர்களாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேல் மாகாண ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்த 500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு  நேற்று முற்பகல் கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கல்விமான்களும் புத்திஜீவிகளும் அதிகமாக வாழும் நாடுகளே துரிதமாக அபிவிருத்தி அடைவதாகவும் நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார சுபீட்சம் ஆகிய இலக்குகளை அடைய அவர்களது பங்களிப்பு இன்றியமையாததாகும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே ஆசிரியர் சேவையில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார். 

இலவச கல்வியை வழங்குவதற்காக பெருந்தொகை பணத்தை செலவிடுவதுடன், பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் அத்துறையில் காணப்படும் உள்ளக பிரச்சினைகளை தீர்ப்பதற்கு துரித நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஆசிரியர் சேவையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன ஒன்றிணைந்த வினைத்திறன்மிக்க, விரிவான ஒரு செயற்திட்டத்தை அமுல்படுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார். 

மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வர்த்தகம், கலை, விஞ்ஞானம், கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடநெறிகளுக்கும் தமிழ்மொழி மூல பட்டதாரிகளுக்கும் இன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. 

ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் வகையில் 15 பட்டதாரிகளுக்கு ஜனாதிபதி இதன்போது நியமனக் கடிதங்களை வழங்கினார்.

மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச, மாகாண அமைச்சர்கள் காமினி திலக்கசிறி, சுமித்லால் மென்டிஸ், லலித் வணிகரத்ன மற்றும் மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஜி.விஜேவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.