சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய படத்தில் இன்று முதல் நடிக்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில் காலா இன்று வெளியாகியிருக்கிறது. உலகம் முழுவதும் 1800க்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை வழங்கி வருகிறார்கள். படத்தைப் பற்றி நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்கள் வருகின்றன.

இருப்பினும் காலா படம் வெளியாகும் இன்று ரஜினி அடுத்தப்படத்திற்கான படப்பிடிப்பிற்காக வட இந்திய நகரமான டேராடூனில் சென்று பங்குபற்றியிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் காலாவை பெரிய அளவில் வரவேற்றிருக்கிறார்கள்.

குறித்த படத்தில் ரஜினிகாந்த்துடன் விஜய் சேதுபதி, சிம்ரன், அஞ்சலி, பொபி சிம்ஹா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவிருக்கிறார்கள். திரு ஒளிப்பதிவு செய்யும் குறித்த  படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

இன்று தொடங்கியிருக்கும் இந்த படத்தின் படபிடிப்பு தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை நடைபெறும் என்றும், அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் இந்த படம் வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.