(எம்.சி.நஜிமுதீன்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு  மஹரகமை நகர சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமணம் செய்துகொண்டனர்.

இதேவேளை குறித்த ஆறு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணத்திற்கு எதிரப்புத் தெரிவித்து நகர சபை உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததனால் நாகர சபையில் அமளிதுமளி ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுன  தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சைக்கிள் சின்னத்தில் சுயேட்சக்குழு 2 இல் போட்டியிட்ட அணிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிப்பதற்குத் தீர்மானித்தது. எனவே குறித்த சுயேட்சக்குழு தேர்தலில் 44,783 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது. அவ்வணிக்கு 25 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றிருந்தது.

இவ்வாறான நிலையில் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட ஆறு பெண் உறுப்பினர்கள் இராஜினாமா செய்தனர். அதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஆறு பேர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.