மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை இன்று காலை முற்றுகையிட்ட வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினர் சந்தேக நபர்கள் இருவரையும் கசிப்பு உற்பத்தி செய்யும் கோடா இரண்டு பரல்களையும் மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், 

மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கீழ் செயற்படும் போதை ஒழிப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்குப்பயன்படுத்தப்படும் 3000 லீற்றர் கொண்ட தலா இரண்டு பரல்கள் கோடாவினையும் சந்தேக நபர்கள் 27, 25 வயதுடைய இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மடு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணகைளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.