(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டின்மீன் தடைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும், இலங்கை -சீனாவின் பொருளாதார உறவுமுறையை கருத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று மதுவரிக் கட்டளை சட்டத்தின் கீழான விவாதத்தின் பொது இந்த விடயத்தில் சுட்டிக்காட்டினார், அவர் மேலும் கூறுகையில். 

மக்கரல் மீன்களை கொண்டு தயாரிக்கப்படும் டின் மீன்கள் தற்போது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வர்க்க மீன்களில் மிகவும் நுண்ணிய பூச்சி  உள்ளதாக கூறப்பட்டு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் உணவு கட்டுப்பட்டு அதிகார சபை இந்த தடைகளை விதித்துள்ளது. 

அதிக  உஷ்ணம் காரணமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான காரணிகள் உருவாகும். இதற்கு முன்னரும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 

சீனாவின் டின் மீன் நிறுவனம் ஒன்றே இதனை தயாரித்து வருகின்றது. எனினும் சீனாவின் உணவு பாதுகாப்பு அமைப்பு இதில் சிக்கல்கள் இல்லை என்ற காரணிகளை வெளியிட்டுள்ளது. 

எனவே இதன் உண்மைத் தன்மைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும். மீண்டும் பரிசோதனைகளை முன்னெடுத்து நிலைமைகளை தெளிவுபடுத்தும்  நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். 

இவ்வாறு சீனாவின் உற்பத்தி நிறுத்துவதன் மூலமாக இலங்கை சீனா ஆகிய நாடுகளின் பொருளாதார உறவு முறியக்கூடிய  நிலைமைகள் ஏற்படலாம். இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் அரசியல் உறவுமுறை மட்டும் அல்லாது பொருளாதார உறவும் பாரிய அளவில்ன் உள்ளது. 

அத்துடன் இலங்கைக்கு கொண்டுவரும் டின் மீன் உற்பத்திகளில் சீனாவின் மக்கரல் டின்மீன்களும் பாரிய அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றது. 

ஆகவே இவற்றையும் கவனத்தில் கொண்டு செயற்படவேண்டும், நாம் எந்த நிறுவனத்தையும் ஆதரித்து எமது கருத்துக்களை முன்வைக்க்கவில்லை. எனினும் நாடுகளின் உறவுமுறையையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.