(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

தோட்டபுற பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கு விசேட அவதானம் அரசாங்கம் செலுத்தி வருகின்றது. இதன்படி தோட்ட பாடசாலைகளின் கல்வி நிலைமையை அதிகரிக்கும் நோக்கில் விரைவில் 3800 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் டி சொய்சா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ரன்ஜித் டி சொய்சா கேள்வி எழுப்பும் போது,

இரத்தினபுரி மாவட்டத்தில் பல்கலைகழகங்களுக்கு மாணவர்கள் இணைப்பில் சிங்கள மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்கு இடையில் பெரும் இடைவெளி காணப்படுகின்றது. ஆகவே இதனால் தமிழ் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த இடைவெளி உள்ளது. ஆகவே இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? அத்துடன் மலையகத்தின் கல்வி தரத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்னெடுக்கும் ஏற்பாடுகள் என்ன? என்றார்.

இதனையடுத்து பதிலளித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,

தோட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு நாம் விசேட அவதானம் செலுத்தி வருகின்றோம். இதன்படி அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் ஊடாக தோட்ட பாடசாலைகளின் தரத்தை அதிகரித்து வருகின்றோம். அத்துடன் பாடசாலைகளுக்கு போதுமான அளவுக்கு நிலபரப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

அத்துடன் தோட்ட பாடசாலையின் ஆசிரிய பற்றாகுறை நிவர்த்தி செய்ய ஏற்கனவே ஆசிரிய உதவியாளர் பலரை நியமித்தோம். இந்நிலையில் தோட்ட பாடசாலை தரமான கல்வி‍யை வழங்குவதற்கு 3800 பேருக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளோம்.

தோட்ட கல்வி வளர்ச்சிக்கு உட்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கத்திடம் இருந்து 300 மில்லியன் நிதி உதவி கிடைத்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் 250 மில்லியன் ரூபா பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க ஒதுக்கீடு செய்துள்ளோம். அத்துடன் ஆய்வு கூடங்களை நிர்மாணித்தும் வருகின்றோம் என்றார்.