மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள கருவப்பங்கேணி இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கசிப்பை தயாரித்து  நீண்டகாலமாக  விநியோகித்து வந்த வியாபாரி உட்பட மூவரை கைது செய்யததாக பொலிஸார் தெரிவித்தனர். 

 100 லீற்றருக்கு மேற்பட்ட கசிப்பு மற்றும் உபகரணங்களை  நேற்று அதிகாலை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மட்டு பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை கருவப்பங்கேணி பிரதான வீதியிலுள்ள குறித்த வீட்டை சுற்றுவளைத்து சோதனையிட்டனர்.

குறித்த வீட்டின் நிலப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்புக்களையும் அதனை தயாரிக்கும் உபகரணங்களையும் மீட்டுள்ளனர். 

நீண்டகாலமாக கசிப்பை உற்பத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, கரடியனாறு, வவுணதீவு, வாகரை போன்ற பிரதேசங்களுக்கு விநியோகித்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது 

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.