இரு தனியார் பயணிகள் பஸ்கள் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில் வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நிட்டம்புவ, முறுத்தவெல பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மாவனெல்லயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வண்டியொன்றும் கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ் வண்டியுமே விபத்திற்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்தில் இராணுவ வீரர் உட்பட இரு பயணிகள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் 22 மற்றும் 32 வயதுடையவர்களெனவும் கேகாலை மற்றும் மாவனெல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்திற்குள்ளான இரு தனியார் பஸ் வண்டிகளின் சாரதிகளும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.