தேசிய பால் வளத்துறையை ஊக்குவிப்பதுடன் 2025ஆம் ஆண்டளவில் இலங்கையை திரவப்பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான பல்நோக்குடைய வேலைத்திட்டம் உள்ளடங்கிய  சட்டமூலம் ஒன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி குறித்த துறைகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தற்போது 450 பாடசாலைகளில் செயற்படுத்தப்பட்டு வரும் திரவப்பால் வழங்கும் செயற்திட்டத்தை மேலும் விரிவாக்கி எதிர்வரும் காலங்களில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பால் குவளை ஒன்றை வழங்கும் நோக்குடைய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன் முதற்கட்டமாக சுமார் 17 இலட்சம் அளவிலான ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்குடைய திரவப்பால் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பால் உற்பத்தி மற்றும் பாவனை அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தேசிய பால் வளத்துறையை ஊக்குவிப்பதன் ஊடாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் அளவை குறைத்துக்கொள்ளும் வகையில் அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயற்பாடுகள் அமைய வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி,

 திரவப்பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான முறையான மற்றும் துரித செயற்திட்டங்களை அமுல்படுத்துவதன் அவசியத்தை தெளிவுபடுத்தினார். 

குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டின் குழந்தைகளின் போஷாக்கினை மேம்படுத்துவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டினை இல்லாதொழிக்கவும் முடியுமென்று இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலதிக திரவப்பால் உற்பத்திகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலமாக பால் உற்பத்தியாளர்களுக்கு திரவப்பாலுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

திரவப்பால் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்ததுடன், தனியார்துறையின் பங்களிப்பை பெற்றுக்கொண்டு குறித்த செயற்திட்டத்தை செயற்படுத்துமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வள மேம்பாடு, கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். 

குறித்த செயற்திட்டத்தினை வெற்றிகரமாக முன்கொண்டு செல்ல அரசாங்கம் மற்றும் தனியார்துறைகளின் அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைத்து அதன் ஊடாக தீர்மானங்களை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

ஐஸ்கிறீம் உள்ளிட்ட பால் சம்பந்தப்பட்ட பால் உணவு பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தும் பொருட்கள் தரமானதா என கவனம் செலுத்தப்பட வேண்டியதுடன், உற்பத்தியில் தரமற்ற பொருட்களை உபயோகிப்பவர்கள் தொடர்பாக கண்டறிந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன்போது அறிவுரை வழங்கினார். 

மீன்பிடி மற்றும் நீரியல் வள மேம்பாடு மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி த சொய்சா, கிராமிய பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டி.கே.ஆர்.ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலக்க, தேசிய கால்நடை வள சபையின் தலைவர் கே.முத்துவிநாயம் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.