(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

வடக்கில் வைத்திய சேவை பற்றாக்குறை பக்கச்சார்பான அரசியல் நடவடிக்கைகளா என்ற கேள்வி எழுகின்ற நிலையில், வடக்கில் மூடப்பட்டுள்ள 24 வைத்தியசாலைகளை சீர்செய்ய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். 

உலக சுகாதார அமைப்பின்  உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன  வடக்கின் சுகாதார வசதி பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் அவர் பெயருக்கு களங்கம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கடை, அலுவலக ஊழியர் ( திருத்தச்) சட்டம்  மற்றும் மகப்பேற்று நன்மைகள் (திருத்தச் ) சட்டம் ஆகியவற்றின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

பெண்கள் விடயத்தில் ஒரு கரிசனை கொள்ளப்படவேண்டும், அவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. அவர்களின் மகப்பேற்று விடுமுறைகள் முக்கியமான ஒரு விடயமாகும். மகப்பேற்றின் போது தாய்க்கு  மூன்று மாதகால விடுமுறை  என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு உயிருள்ள பிள்ளையை ஈன்றெடுத்த தாயை விடவும் இறந்த பிள்ளையை பெற்ற தாயின் மனோநிலை மிகவும் மோசமானது. அவர்களுக்கான விடுமுறை ஆறு வாரகாலம் என கூறப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமானது. அவரது மனோநிலை மாறும் வரையில் அவர் மீது அக்கறை செலுத்த வேண்டும். ஆகவே அவர்களது விடுமுறை கால எல்லை குறித்து மேலும் கவனம் செலுத்த வேண்டும். 

மேலும் மகப்பேற்று காலத்தில் தாய் இறந்தால் அது முக்கிய காரணியாகும். அவர் ஏன் இறந்தார் என்பதை ஆராய வேண்டும். முன்னைய காலங்களில் இவ்வாறு தாய்மார் மரணம் அதிகமாக  இருந்தது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மருத்துவ வசதிகள், சுகாதார வசதிகள் இல்லாது வடக்கில் பலர் இவ்வாறு இறந்தனர். வைத்திய சேவைகளில் பல இடர்பார்கள் இருந்த காரணத்தினால் இவ்வாறான  நிலைமைகள் காணப்பட்டன. இன்று யுத்தம் இல்லாத போதும் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒரு மகப்பேற்று நிபுணர் இல்லாதுள்ளமை மிகவும் மோசனான விடயமாகும். 2017 அக்டோபர் மாதம் தொடக்கம் அங்கு ஒரு மகப்பேற்று வைத்தியர் இல்லாத நிலையில், ஒரு மயக்கமருந்து நிபுணர் இல்லாத நிலையில்  பாராளுமன்றத்தில் விடுமுறைகள் குறித்து பேசிக்கொண்டுள்ளோம். மன்னார் மக்கள் வேறு பிரதேசங்களில் வைத்திய உதவிகளை நாடவேண்டிய நிலைமை உள்ளது. 

வடக்கில் வைத்திய சேவை பற்றாக்குறை பக்கசார்பான அரசியல் நடவடிக்கைகளா என்ற கேள்வியும் எழுகின்றது. ஆகவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும. சுகாதார சேவையாற்றும் அதிகாரிகளின் திட்டமிட்ட மருத்துவ துஸ்பிரயோகம் என  இதனை கூறவேண்டும். வடக்கு பகுதிகளில் வைத்தியர்கள் சேவையாற்ற மறுக்கின்றமையே இதற்குக் காரணமாகும்.  சட்ட ரீதியான துன்புறுத்தல்கள் இவையாகும். ஆகவே சுகாதார அமைச்சு இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். உலக சுகாதார நிறுவனத்திற்கு அமைச்சர் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், அதனை நாம் வரவேற்கின்றோம் ஆகவே தனது நற்பெயரை காப்பாற்ற சுகாதார அமைச்சர் முன்வர வேண்டும். வடக்கில் மூடப்பட்டுள்ள 24 வைத்தியசாலைகளை சீர்செய்ய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும். வடக்கின் சுகாதார சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.