80 நாட்கள் மட்டும் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்க அனுமதி தாருங்கள் : மீனவர் சங்கத் தலைவர் கோரிக்கை

Published By: Robert

22 Feb, 2016 | 09:06 AM
image

வெறுமனே அரசியல் சுயநலத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு இந்திய-இலங்கை அரசாங்கங்கள் இருநாட்டு மீனவர்களையும் தூண்டிவிடும் நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருகின்றன. என்பது நாட்கள் மாத்திரம் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடியை மேற்கொள்ள எமக்கு அனுமதிக்க வேண்டும். அந்த கால எல்லைக்கு அப்பால் ஒரு நாளேனும் எமது மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்க மாட்டார்கள் என ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் எமரிட் தெரிவித்தார்.

இரு நாட்டு அரசாங்கங்களும் மனது வைத்தால் நாம் நேரடியாக இலங்கை அரசாங்கத்திடமும், வடமாகாண முதலமைச்சருடனும் பேச்சவார்த்தை நடத்தி தீர்வுகாண தயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இந்த திருவிழாவில் கலந்துகொண்டிருந்தபோது இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் வினவியபோதே ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் எமரிட் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கான பேச்சுவாரத்தை என்பது இன்று நேற்று அல்ல பலகாலமாகவே நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை எட்டக்கூடிய நிலைமை இருதரப்பினர் இடையிலும் ஏற்படவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கை மீனவர் சங்கத் தலைவர்களுடன் தமிழ்நாட்டில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தி பல இணக்கப்பாடுகளை கண்டோம்.

குறிப்பாக இலங்கை கடல் எல்லையில் என்பது நாட்கள் மாத்திரம் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கப்பட வேண்டும் என முக்கிய கோரிக்கையை முன்வைத்தோம். அதேபோல் கடல்வளத்தை அழிக்காது பாதுகாப்பது என பொது உடன்பாட்டில் நாம் எப்போதும் உள்ளோம்.

இருநாடுகளினதும் அரசாங்கங்களும் மனது வைத்தால் இந்த மீனவர் பிரச்சினையை ஒரே நாளில் தீர்த்து வைக்க முடியும். ஆனால் அரசியல் சுயநலத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு இருநாட்டு மீனவர்களையும் தூண்டிவிடும் நடவடிக்கைகளையே இரு அரசாங்கங்களும் முன்னெடுத்து வருகின்றன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஆகவே பிரச்சினையை தீர்ப்பது அரசாங்கத்தின் கைகளிலேயே உள்ளது. நாம் விட்டுக்கொடுக்க தயாராக உள்ளோம்.

நாம் வாக்குறுதி வழங்கியதைப்போல என்பது நாட்கள் மாத்திரம் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அந்த கால எல்லைக்கு அப்பால் ஒரு நாளேனும் எமது மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்க மாட்டார்கள் என்றார்.

தமிழ்நாடு அனைத்து விசைப்படகுகள் மீனவர் சங்க பொதுச்செயலாளர் யேசுராஜா குறிப்பிடுகையில்,

இந்தியாவிடம் இருந்து 1974 ஆம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைத்த பின்னர் இலங்கை இந்திய மீனவர்கள் மத்தியில் எந்த குழப்பநிலையும் இல்லாது சுமூகமான வகையில் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. எனினும் 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் இலங்கையில் இடம்பெறற பின்னரே இலங்கை மற்றும் இந்திய நாடுகளின் மீனவர்கள் மத்தியில் குழப்பநிலைமைகள் உருவாகின. குறிப்பாக தமிழக மீனவர்கள் விடுதலைப்புலிகள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவிசெய்யும் வகையில் செயற்படுவதாக குறிப்பிட்டு எமது தமிழக மீனவர்களை கைதுசெய்யும் சூழ்நிலை உருவானது.

எனினும் யுத்தம் முடிவுக்கு வந்தபோதிலும் இந்த நிலைமையில் பெரியளவில் எந்த மாற்றங்களையும் நாம் கவனிக்கவில்லை. இலங்கை கடற்படையினரின் ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணமே இருந்தது. எனினும் கடந்த ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் அமையும் என நாம் நம்பினோம். ஆனால் இன்றும் பிரச்சினைகள் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.

இந்த மீனவர் பிரச்சினையில் இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் தமது அரசியல் சுயநலத்தை மாத்திரம் கவனத்தில் கொண்டு இரு நாட்டு மீனவர்களையும் தூண்டிவிடுகின்றன. இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். கச்சதீவு என்பது இரு நாடுகளுக்கும் பொதுவான எல்லையாகும். இங்கு இலங்கை மீனவர்களின் ஆதிக்கம் மாத்திரம் மேலோங்கியிருப்பது கண்டிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.

இப்போது நாம் தமிழ்நாடு அரசாங்கத்திடம் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசாங்கம் தான் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டும். அவ்வாறான நிலையில் நாம் நேரடியாக இலங்கை அரசாங்கத்திடமும், வடமாகாண முதலமைச்சருடனும் பேச்சவார்த்தை நடத்தி தீர்வுகான தயாராக உள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17