நாட்டின் முதன்மை பணவீக்கமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. 

இது கடந்த மார்ச் மாதத்தில் 2.8  சதவீமாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஒரு மாத காலப்பகுதியில் 1.2 சதவீத வீழ்ச்சியாவதுடன் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைந்த அளவாகும்.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க வீழ்ச்சிக்கு 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உணவு வகைகளில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட உயர்வினால் தோற்றுவிக்கப்பட்ட உயர்வான தளத்தினால் ஏற்பட்டதாகும்.

மேலும் இக்காலப்பகுதியில் ஆண்டு சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய  நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றமானது 6.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது கடந்த மார்ச் மாத்தில் 6.7 சதவீதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் மாதாந்த மாற்றத்தின் அடிப்படையில் நோக்கும் போது  தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 122.8 புள்ளிகளில் இருந்து  ஏப்ரல் மாதத்தில் 122.9  புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

இவ்வதிகரிப்புக்கு  லங்கா ஐ.ஓ.சி யினால் மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட போக்குவரத்து துறை சார் அதிகரிப்பு , வெறிக்குடி வகைகள் மற்றும் புகையிலை  என்பவறின் விலை அதிகரிப்பே முக்கிய காரணியாக அமைந்தது. 

அதேவேளை, இக்காலப்பகுதியில் உணவு வகைகளில் காய்கறிகள், பெரிய வெங்காயம் மற்றும் தேங்காய் என்பவற்றின் அதிகரிக்கப்பட்ட நிரம்பல் நிலைகள் காரணமாக விலையில் வீழ்ச்சி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மையப்பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் 1.9 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்டதுடன் ஆண்டு சராசரி தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்  மையப்பணவீக்கம் மார்ச் மாதத்தில் 3.6 சதவீதத்தில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 3.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.