பழைய பொருட்கள் மற்றும் இரும்புகளைக் கொள்வனவு செய்பவர்களினால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்தும் நுண்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களினால் ஏற்படும் அசௌகரியங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ள வலி.தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன்,  இவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு பொலிஸாரின் உதவியை நாடியதுடன் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடுபவர்கள் பிரதேச சபையின் வியாபார உரிமைத்தைக் கட்டாயம் பெற்றிருக்கவேண்டுமென்றும் அறிவித்துள்ளார்.

“பழைய பொருட்கள் கொள்வனவு செய்வோர் மற்றும் நுண்கடன் வழங்குவோர் தொடர்பானது" என்ற தலையங்கத்தின் மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு தவிசாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 பழைய பொருட்கள் கொள்வனவு செய்வோர் மற்றும் நுண்கடன் வழங்குவோர் தொடர்பானது

எமது பிரதேச சபை எல்லைக்குள் பழைய பொருட்கள் மற்றும் இரும்புகள் கொள்வனவு செய்வோரது நடமாட்டம் கூடுதலாகக் காணப்படுகின்றுது. இவர்களில் சிலரது நோக்கம் வியாபாரம் மட்டுமல்லாது களவு மற்றும் போதைப்பொருள் விநியோகமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.களவு மற்றும் போதைப்பொருள் விநியோகத்தினை தடைசெய்யும் முகமாக எமது எல்லைக்குள் பழைய பொருட்கள் விற்பனை செய்வோர் பிரதேச சபையின் வியாபார உரிமம் கட்டாயம் பெற்றிருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் எமது பிரதேசங்களில் புதிதாக அறிமுகமாகி வரும் நுண்கடன் திட்டமானது பலவகையிலும் மக்களை பாதிப்பிற்குள்ளாக்கி வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது. நுண்கடனை வழங்கியபின் கடனை அறவிடுவதற்காக வீடுகளிற்கு செல்வோரால் வீடுகளில் பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. நுண்கடன் அறவிடுவோர் வீடுகளுக்கு செல்வதற்கான நேர எல்லை வழங்கபடவேண்டும் என்பதுடன் அறவீடுகளிற்காக வீடுகளுக்கு செல்வோர்  விபரங்கள் பெறப்படவேண்டும் என்பதற்காக நுண்கடன் திட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவோர் எமது பிரதேச சபையின் வியாபார உரிமத்தினை கட்டாயம் பெற்றிருத்தல் வேண்டும் என்பதனையும் வலியுறுத்துமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

பொது மக்களின் நன்மைகருதியும் அலுவலக நடவடிக்கைகளின் பொருட்டு அவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதற்காகவும் மேற்படி பொது மக்களுக்கு சிரமமேற்படுத்தும் அல்லது தீங்கு பயக்கும் செயற்பாடுகளை தாங்கள் இனம்காணும் பட்சத்தில் எமக்கு அறியத்துருமாறு கேட்டுக்கொள்வதோடு மேற்படி செயற்பாட்டாளர்களிடம் முறையாக எம்மிடம் பெறப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் உள்ளனவா? என்பதனையும்  பரிசீலிக்கும்படி தங்களை கேட்டுக்கொள்கின்றேன். என அக் கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.