சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்ட சிறுவனொருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா, மொட்டிங்கொம் தோட்டத்தில் வசித்து வந்த நான்கரை வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் வசித்துவந்த குறித்த சிறுவன் பையொன்றில் இருந்த சொக்லெட் வகைகளை எடுத்து சாப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பையில் சில மருந்து வகைகளும் இருந்துள்ளன. இதை அவதானிக்காத குறித்த சிறுவன் அவையும் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளையும் எடுத்து சாப்பிட்டுள்ளான்.

இந்நிலையில் மருந்து வில்லைகளை உட்கொண்ட நிலையில் சிறுவனுக்கு வாந்தியும் உடற்சோர்வும் ஏற்பட்டநிலையில் வீட்டார் சிறுவனை கிளங்கன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு சிறுவன் மாற்றப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு மேலதிக சிகிச்சைக்காக பேராதெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் ஸ்ரீ மனோகரன் மேர்வின் என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் வீட்டிற்கு சென்ற மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தற்போது வைத்தியசாலையிலுள்ள சிறுவனின் பெற்றோரிடம் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டதன் பின்னர் பிரதே பரிசோதனைகளையடுத்து சிறுவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.